சென்னை: சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் நேற்று 79-வது சுதந்திர தினம் தேசியக் கொடியேற்றி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில், சிறப்பாகப் பணியாற்றி ஊழியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஆளுநர் மாளிகை பணியாளர்களின் குழந்தைகளுக்கு அவர் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். லட்சுமி ரவி உடனிருந்தார். தொடர்ந்து காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கும் ஆளுநர் மரியாதை செலுத்தினார்.

தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிஐஎஸ்எப் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். நிகழ்வில், நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா, மாநில அரசு ப்ளீடர் எட்வின் பிரபாகர் உள்ளிட்ட அரசு வழக்கறிஞர்கள், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சிஐஎஸ்எஃப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை
ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் நடைபெற்ற விழாவில் பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தேசியக் கொடியேற்றினார். நிகழ்வில், எம்.பி.க்கள் ஐ.எஸ்.இன்பதுரை, ஆர்.சுதா, பார் கவுன்சில் துணைத் தலைவர் வி.கார்த்திகேயன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், மெட்ராஸ் பார் அசோசியேஷன் செயலாளர் திருவேங்கடம், லா அசோசியேஷன் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போர் நினைவிடத்தில் தென்னிந்திய பகுதிகளுக்கான ராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் தமிழக, புதுச்சேரி கடற்படை அதிகாரி சதீஷ் ஷெனாய், தாம்பரம் விமானப்படை கமாண்டிங் அதிகாரி தபன் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நிகழ்வில் நீதிபதி கள் மூர்த்தி, சண்முகசுந்தரம், தோத்திரமேரி உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

மரியாதை செலுத்திய மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி.
சென்னை விமான நிலைய இயக்குநர் சி.வி.தீபக், தேசியக் கொடியேற்றினார். திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத் தலைமையகத்தில் துணை முதல்வரும் இயக்க புரவலருமான உதயநிதி ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர். சென்னை, ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

மரியாதை செலுத்திய மாநில தேர்தல் ஆணையர்
ஜோதி நிர்மலாசாமி.
உடன் ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை ஆட்சியரகத்தில் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தேசியக் கொடியேற்றியதைத் தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். ஆணைய செயலர் கி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தார். பசுமை வழிச்சாலையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் தேசியக் கொடியேற்றினார். ஆணையத்தின் பதிவாளர் கபீர், புலனாய்வுப் பிரிவு இயக்குநர் மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்.என்.சிங் தேசியக் கொடியேற்றி
மரியாதை செலுத்தினார்.
பெரம்பூரில் நடைபெற்ற நிகழ்வில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தேசியக் கொடியேற்றினார். நிகழ்வில் கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர், ஆர்பிஎப் முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் கே.அருள் ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐசிஎப் வளாகத்தில் பொதுமேலாளர் யு.சுப்பாராவ், அயனாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் தேசியக் கொடியேற்றினர்.

உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவல
கத்தில் தேசியக் கொடியேற்றி
மரியாதை செலுத்திய தொழிலாளர்
ஆணையர் சி.அ.ராமன்
தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் ஆணையர் சி.அ.ராமன் கொடியேற்றினார். மின்வாரிய தலைமையகத்தில் வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா தேசியக் கொடியேற்றினார். முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகத்தில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சீனிவாச ஆர்.ரெட்டி தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். தாட்கோ தலைமையகத்தில் தலைவர் நா.இளையராஜா கொடியேற்றினார்.