சென்னை: கரூர் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்துக்கு தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கரூரில் நடந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் தங்களது இன்னுயிரை இழந்திருக்கின்றனர். அவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வரை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். மேலும், தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தார்.
கரூர் விவகாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசிடம் உரிய விளக்கம் கேட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்துக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். தமிழக அரசு பதில் கொடுத்த பிறகு, அதுபற்றி விரிவாக பேசலாம். இவ்வாறு அவர் கூறினார்.