சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று சொன்னதை இந்தியா கூட்டணி முறியடித்து இழுபறி நிலையில் ஆட்சி அமைத்ததே பெரிய மாற்றமாகும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.
இது குறித்து அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “தமிழக முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று (31.08.2025) சென்னை கொளத்தூர், பூம்புகார் நகரில் கட்டப்பட்டு வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடம், ராஜாஜி நகரில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் உறைவிடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும், சூளை அங்காளம்மன் திருக்கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்திடவும், குடமுழுக்கிற்கு வருகை தரும் பக்தர்கள் எளிதாகவும், விரைவாகவும் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மறைந்த முதல்வர்கள் காமராஜர், பக்தவச் சலம், கருணாநிதி ஆகியோரது ஆட்சி காலம் மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில் திருக்கோயில்கள் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு நடத்தப்படுவது வரலாறாகும். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் சார்பில் சைவ சித்தாந்த வகுப்புகளோடு கொளத்தூரில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எவர்வின் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரிக்கு என்று புதிதாக கட்டடம் கட்டுவதற்கு சோமநாத சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருந்த அனாதீன இடம் என 5.96 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மாணவச் செல்வங்கள் உயர்கல்வி பயிலும் வகையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 22 வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அறை, முதல்வரின் படைப்பகம், உணவகம், வாகனம் நிறுத்துமிடம் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும்.
தமிழக முதல்வரின் சீரிய வழிகாட்டுதலின்படி, கொளத்தூர் ராஜாஜி நகரில் ரூ.8.88 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு 60 வயதிற்கு மேற்பட்ட, குடும்பத்தில் பராமரிக்க வசதி வாய்ப்பில்லாத 100 மூத்த குடிமக்கள் தங்கிடும் வகையில் அறைகள், சமையலறை மற்றும் உணவு கூடம், அவசர ஊர்தியுடன் மருத்துவ மையம், நடைபாதையுடன் கூடிய சிறு பூங்கா, யோகா மற்றும் தியான அறை போன்ற வசதியுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த மூத்த குடிமக்கள் உறைவிடமும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த உறைவிடத்திற்கான தொடர் செலவினத்திற்காக செல்வந்தர்கள் மற்றும் நிறுவனங்களின் சி.எஸ்,ஆர் நிதி வரவேற்கப்பட்டதில், இதுவரை ரூ.5 கோடி வரப்பெற்றுள்ளது. இதனை வைப்பு நிதியாக வைத்து, அதன் மூலம் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையில் மூத்த குடிமக்கள் உறைவிடம் தொடர்ந்து பராமரிக்கப்படும்.
சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சூளை அங்காளம்மன் திருக்கோயிலுக்கு 2009ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இத்திருக் கோயிலுக்கு தற்போது ரூ.3 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரம் மற்றும் அனைத்து சன்னதிகள் புதுப்பித்தல், தங்க விமானம், புதிய கொடி மரம், பக்தர்கள் தங்குமிடம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருகின்ற செப்டம்பர் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு பெரு விழாவின் போது பக்தர்கள் எளிதாகவும் விரைவாகவும் தரிசனம் மேற்கொள்ளும் வகையிலும், அவர்களுக்கு குடிநீர் உணவு மற்றும் பிரசாத பைகள் வழங்கிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்களிடம் எழுந்துள்ள எதிர்ப்பு காரணமாக விரைவில் தமிழகத்தில் மாற்றம் வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று சொன்னதை இந்தியா கூட்டணி முறியடித்து இழுபறி நிலையில் ஆட்சி அமைத்ததே பெரிய மாற்றமாகும். தற்போது பாஜகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒருவர் கூட சட்டமன்றத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்படும். இதுவே அந்த மாற்றமாகும்” என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் முல்லை, கவெனிதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.