சென்னை: மது குடித்துவிட்டு பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநருக்கு கடும் தண்டனை வழங்குவது தொடர்பாக போக்குவரத்து துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்து கழகத்தில் மது குடித்துவிட்டு பணிக்கு வரக் கூடாது எனவும் அதற்கான தண்டனை குறித்தும் சுற்றறிக்கை வாயிலாக பல முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மது அருந்தியிருப்பதை கண்டறியும் கருவியும் கொள்முதல் செய்யப்பட்டு, நாள்தோறும் சோதனை நடத்தப்படுகிறது.
இதனால் மது அருந்தியதாக முன்வைக்கப்படும் புகார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும், அவ்வப்போது எழும் புகாரையும் முற்றிலும் தவிர்க்கும் வகையில் மது குடித்துவிட்டு பணிக்கு வருவோருக்கு கடும் தண்டனைகள் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
அதன்படி, மதுபோதை குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டால், அரசின் அனுமதிக்கு பிறகே மீண்டும் பணியில் சேர முடியும். மண்டல அளவில் பணியிடமாற்றம், ஊதிய உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படக் கூடும்.
இதுதொடர்பான ஆலோசனைகளுக்கு பிறகு அரசு மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். இதற்கிடையே, மனஅழுத்தம் உள்ளிட்டவற்றால் மது போதைக்கு ஆளான ஊழியர்களுக்கான மனநல ஆலோசனையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.