மதுரை: மதுரை ஹாக்கி மைதானம் தென் தமிழக வீரர்கள் பயிற்சி எடுக்க சிறந்த தளம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின், மாவட்ட விளையாட்டு அரங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடைபெற்று வரும் பாரா விளையாட்டு வீரர்களுக்கான உள் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், ஹாக்கி மைதானம் ஆகிய திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மதுரையில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 29 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டிக்காக ரூ.100 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த மைதானத்தை சென்னை ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் உள்ளது போல அமைப்பதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மைதானம், தென் தமிழகத்தில் உள்ள ஹாக்கி வீரர்களுக்கு பயிற்சி எடுக்க சிறந்த களமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்எல்ஏ மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.