சொத்து வரி முறைகேட்டு புகாரில் கணவர் சிறை சென்றதால் மேயர் இந்திராணியுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தவிர்த்து வருகிறார்.
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் உள்பட 23 பேர் இதுவரை கைது செய்யப் பட்டுள்ளனர். பொன் வசந்த் முன்னாள் சபாநாயகர் பழனிவேல் ராஜன் மற்றும் தற்போது அவரது மகனும், அமைச்சருமான பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அதற்கு பரிசாகத்தான், பொன் வசந்த் மனைவி இந்திராணியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேயராக்கினார்.
மாநகராட்சி நிர்வாகத்தில் பொன்வசந்த் தலையீடு, அவரது செயல்பாடுகள் பிடிக்காமல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொன் வசந்த்தை கடந்த ஓராண்டுக்கு மேலாக ஒதுக்கி வைத்திருந்தார்.
இந்த சூழலில், மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் பொன்வசந்த் கைது ஆனதால், தற்போது மேயர் இந்திராணியையுடன் பொது நிகழ்ச்சிகளில் சந்திப்பதை அமைச்சர் பழனிவேல் ராஜன் தவிர்ப்பதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் மத்திய தொகுதியில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டபோதும் மேயர் இந்திராணியை தன்னுடன் வர அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று மத்திய தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 21-வது வார்டு தத்தனேரி களத்துப்பொட்டல் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடம் திறப்பு விழா, தத்தனேரி பகுதியில் நடக்கும் மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வில் மேயர் இந்திராணி பங்கேற்கவில்லை. அவருக்கு நிகழ்ச்சிக்கான அழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது. மாநகராட்சிக்குட்பட்ட அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இதுபோல் தொடர்ந்து மேயர் இந்திராணி புறக்கணிக்கப்படுவதன் மூலம் அவர் ஓரங்கட்டப்படுறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மேயருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் வரவில்லை என தெரிகிறது. இதில் அரசியல் இருக்கிறதா என தெரியவில்லை’’ என்றார்.
திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “சமுதாயக் கூட திறப்பு நிகழ்ச்சி குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. மேயர் வருவதை தவிர்க்கவே, அமைச்சர் நிகழ்ச்சிகள் பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை” என்றனர்.