மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு அந்தந்த உட்கோட்ட டிஎஸ்பிக்களிடம் வாகன பாஸ் பெற வேண்டும் என்பது உட்பட 52 நிபந்தனைகளின் பேரில் போலீஸார் அனுமதி வழங்கினர். இதில் வாகன பாஸ் உள்ளிட்ட 6 நிபந்தனைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த தனி நீதிபதி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகனங்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய முடியாது. அதே நேரத்தில் வாகன பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் 24 மணி நேரத்தில் போலீஸார் பாஸ் வழங்க வேண்டும். பாஸ் வழங்க மறுத்தால் அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து கொடைக்கானல், ஊட்டியில் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்குவது போல் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு ஆன்லைன் வழியாக இ-பாஸ் வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி, இ-பாஸ் வழங்க உத்தரவிட முடியாது. ஜூன் 21 காலை 10 மணி வரை முருகன் பக்தர்கள் மாநாட்டுக்கு வாகன பாஸ் கேட்டு விண்ணப்பிக்கலாம் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்து முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து முன்னணி சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது. இதையடுத்து வாகன பாஸ் நிபந்தனையை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு இன்று (ஜூன் 20) விசாரித்தது. இந்து முன்னணி வழக்கறிஞர் வாதிடுகையில், “வாகனத்தில் வரக்கூடியவர்கள் முறையான வாகன அனுமதி பாஸ் வைத்திருந்தால் மட்டுமே மதுரை மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என மதுரை அண்ணா நகர் காவல் துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்று எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை” என்றார்.
அரசு தரப்பில், “இதுபோன்று அதிக அளவில் பொதுமக்கள் கூடும் மாநாடுகளுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்துவது தொடர்பாக தலைமை காவலர் தரத்துக்கு மேல் உள்ள அதிகாரிகள் நிபந்தனைகள் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த நிபந்தனை மாநாட்டுக்கு வரும் வாகனங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பிறப்பிக்கப்படவில்லை. முறைப்படுத்தும் நோக்கத்தில் தான் விதிக்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “அனைத்து அரசியல் கட்சிகள் மாநாட்டுக்கும் இதுபோன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகிறதா? முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு மாநாடு நடைபெறும் இடத்தில் வாகனங்களுக்கு உரிய ஆவணங்களை சரிபார்த்து பாஸ் வழங்கலாம்,” என்றனர். அதற்கு அரசு தரப்பில், “அனைத்து அரசியல் கட்சிகள் மாநாட்டுக்கும் வாகன பாஸ் நிபந்தனை விதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுபடி உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால் வாகனங்கள் மாநாட்டுக்குள் அனுமதிக்கப்படாது. அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்,” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனை ரத்து செய்யப்படுகிறது. மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்தும் இடங்களில் போலீஸ் பூத் அமைக்க வேண்டும். மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்களின் வாகன காப்பீடு, ஓட்டுநர் உரிமம், ஓட்டுனரின் ஆதார் அட்டை, வாகன பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை போலீஸ் பூத்தில் சமர்பிக்க வேண்டும். இதைப் பதிவு செய்த பிறகே மாநாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும்,” என உத்தரவிட்டனர்.