மதுரை: மதுரை மாநாடு வெற்றி பெற கருப்புசாமி கோயிலில் கிடா வெட்டி தொண்டர்கள், மக்களுக்கு தவெகவினர் விருந்தளித்தனர்.
மதுரை – அருப்புக்கோட்டை சாலையில் பாரபத்தி எனுமிடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆக. 21-ல் நடக்கிறது. இதற்காக 500 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு, அவ்விடத்தில் மேடை அமைத்தல், பார்க்கிங் வசதி, தலைவர், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் வருவதற்கு தனித்தனி வழிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மதுரையில் முகாமிட்டு நிர்வாகிகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ளார்.
மாநாடுக்கான போலீஸ் அனுமதி வழங்கிய நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் மாநாடு நடக்கும் இடத்தை நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு அளிப்பது குறித்த ஆய்வு செய்துள்ளனர். மாநாடுக்கு இன்னும் 2 நாட்ளே இருக்கும் நிலையில் ஏற்பாடுகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மதுரை நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மூலம் தொண்டர்கள், நிர்வாகிகள் மாநாடுக்கு அழைப்பு விடுக்கும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்களில் மாநாடு குறித்த வண்ண சுவரொட்டிகளை தொண்டர்கள் ஒட்டி அழைப்பு விடுத்துள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் மதுரை கீழவாசல் பகுதியிலுள்ள புனித மரியன்னை ஆலயத்திற்கு வந்தவர்களிடம் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தனர். மாட்டுத்தாவணி மார்க்கெட் பகுதிக்கு சென்றும் தாம்பூழம் வைத்து அழைத்தனர்.
ஆக. 21-ல் மாநாடு மாலை 3 மணிக்கு மேல் தொடங்கி இரவு 7.30 மணிக்கு முடிக்க திட்டமிட்டுள்ளனர். முதலில் கொடி ஏற்றுதல், தொடர்ந்து உறுதிமொழி ஏற்றல், கட்சியின் கொள்கை பாடல், தீர்மானம் நிறைவேற்றுதல், விஜய் சிறப்புரை என, மாநாட்டு நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேடையில் இருந்து 100 அடி கம்பத்தில் விஜய் கொடியேற்றுகிறார். இதற்காக மேடைக்கு அருகே கொடிக்கம்பம் நடுவதற்கு இடம் தேர்வு செய்தனர். அதில் 100 அடி கம்பத்தை பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடப்படுகிறது. மேலும், மாநாட்டு திடல் , பார்க்கிங் பகுதியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட கம்பங்களில் தவெக கொடியை பறக்கவிட்டுள்ளனர்.
இந்நிலையில் 2-வது மாநில மாநாடு சிறப்புடன் நடந்து வெற்றியடைய வேண்டி மதுரை வலையங்குளம் பகுதியிலுள்ள ஏர்போர்ட் கருப்புச்சாமி கோயிலில் பொதுமக்களுக்கு கிடா விருந்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, அக்கோயிலில் கிடா வெட்டி பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள், தொண்டர்களுக்கும் அசைவ விருந்தளித்தனர். முன்னதாக பொதுச்செயலாளர் ஆனந்த் விருந்து நிகழ்வை தொடங்கி வைத்தார். மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கல்லணை தலைமையில் கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அசைவ விருந்து சாப்பிட்டனர்.
இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில்,‘இரவு , பகல் பாராமல் பொதுச் செயலாளர் தலைமையில் மாநாடு பணிகள் நடக்கின்றன. ஏற்பாடுகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன. மாநாட்டு திடலில் கட்சி கொடி காற்றில் பிரம்மாண்டமாக பறக்கும் விதமாக இடம் தேர்வு செய்து, 100 அடியில் கம்பம் நடும் பணி நடக்கிறது. தலைவர் விஜய் மேடையில் இருந்து ரிமோட் மூலம் ஏற்றி வைக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான பணிகளும் தொடர்ந்து நடக்கிறது. மாநாடு வெற்றி பெற வேண்டி கருப்புச்சாமி கோயிலில் அசைவ விருந்தும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.