மதுரை: மதுரை மாநகராட்சி விரி விதிப்பில் முறைகேடு தொடர்பான வழக்கை ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி 83வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘ மதுரை மாநகராட்சியில் பெரிய அளவில் சொத்து வரி விதிப்பு முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு முறையான வரி செலுத்தாமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக முந்தைய மாநகராட்சி ஆணையர் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் 2024-ல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் பல மாதங்கள் தாமதத்துக்கு பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் 2022 முதல் 2024 வரை மேயர் மற்றும் மண்டல குழு தலைவர்களுக்கு தெரிந்து வரி விதிப்பு முறைகேடு நடைபெற்றுள்ளது. கட்டிடத்தின் அளவை குறைவாக காட்டுவது, வணிக கட்டிடங்களை குடியிருப்பு கட்டிடங்களாக காட்டுவது, கட்டிடங்களில் சில மாற்றங்களை செய்வது உள்ளிட்டவைகள் மூலம் வரிக்குறைப்பு செய்துள்ளனர்.
இந்த முறைகேட்டால் மதுரை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு இருப்பதால் குற்றப்பிரிவு போலீஸார் சரியாக விசாரணை நடத்தமாட்டார்கள். எனவே, மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மாநகராட்சி ஆணையரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சிப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மகேந்திரன் வாதிடுகையில், மாநகராட்சி ஆணையர் புகார் அளித்துள்ளார். ரூ.10 லட்சம் வரி விதிக்க வேண்டிய இடத்துக்கு ரூ.5 லட்சம் மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த முறைகேட்டை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் பிறகு முதல்வர் தலையிட்டுள்ளார். முதல்வரின் உத்தரவின் பேரில் 5 மண்டல தலைவர்கள், 2 குழு தலைவர்களிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது.
இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதால் தான் மண்டல தலைவர்கள், குழு தலைவர்களிடம் ராஜினாமா பெறப்பட்டுள்ளது. இதனால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றார். பின்னர் நீதிபதிகள், மதுரையில் மட்டும் வரி விதிப்பு முறைகேடு நடைபெறவில்லை. தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்த முறைகேட்டில் சென்னை மாநகராட்சியை மதுரை மாநகராட்சி முந்தியுள்ளது.
வரி விதிப்பில் முறைகேடு நடந்திருப்பதாக மாநகராட்சி ஆணையரே புகார் அளித்துள்ளார். மூன்றாவது நபர் புகார் அளித்திருந்தால் கூட மறுக்கலாம். ஆணையரின் புகாரை எளிதாக கையாள முடியாது. மாநகராட்சி ஆணையர் 16.9.2024-ல் புகார் அளித்துள்ளார். 7 மாதம் தாமதமாக 17.6.2025-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்த முறைகேட்டில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது. இதையடுத்தே மண்டல தலைவர்கள், குழு தலைவர்கள் என 7 பேர் ராஜினாமா செய்துள்ளனர். எனவே இந்த முறைகேடு தொடர்பான விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும். முழு உண்மையையும் வெளிக் கொண்டு வர வேண்டும். முறைகேட்டில் தொடர்புடைய அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். இதனால் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணையை தொடரலாம் என்றனர்.
மனுதாரர் தரப்பில், சிறப்பு விசாரணை குழுவில் இடம் பெறுபவர்களும் முதல்வரின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தான். இதனால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் சிபிசிஐடி விசாரணைக்காவது மாற்ற வேண்டும். விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், எல்லா வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற முடியாது.
சிபிஐக்கு ஏற்கனவே பணிச்சுமை அதிகமாக உள்ளது. மேலும் சிபிஐ விசாரணை முடிய பல ஆண்டுகள் ஆகும். எல்லா அதிகாரிகள் மீதும் நம்பிக்கை வைக்காமல் இருப்பது சரியல்ல. சிபிசிஐடி விசாரணையும் தேவையில்லை. இதனால் மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு வழக்கை விசாரிக்க தென் மண்டல ஐஜி மற்றும் மதுரை மாநகர் காவல் ஆணையர் ஆகியோர் மூத்த, நேர்மையான ஐபிஎஸ் அதிகாரிக தலைமையிலான சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணையை தொடர வேண்டும். சிறப்பு விசாரணை குழு தனது விசாரணை அறிக்கையை ஜூலை 25-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.