மதுரை மாநகராட்சியின் 5 மண்டலத் தலை வர்கள், 2 நிலைக்குழு தலைவர்களை திமுக தலைமை அதிரடியாக ராஜினாமா செய்ய வைத்திருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தை அலறவிட்டுக் கொண்டிருக்கிறது.
மதுரை மாநகராட்சியில் வணிகக் கட்டிடங் களுக்கு வரிவிதிப்பு செய்ததில் 2023-24-ம் ஆண்டுகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. இதைக் கண்டுபிடித்த அப்போதைய கமிஷனர் தினேஷ்குமார், இது தொடர்பாக 5 பில்கலெக்டர்களை அப்போதே சஸ்பெண்ட் செய்தார். இந்த விவகாரத்தில் கமிஷனர், துணை கமிஷனரின் பாஸ்வேர்டுகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்த சைபர் க்ரைம் போலீஸார், இது தொடர்பாக 8 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட மேல் விசாரணை யில், திமுக-வைச் சேர்ந்த மண்டலத் தலைவர் களுக்கும் இந்த முறைகேட்டில் பங்கிருப்பது தெரியவந்திருக்கிறது.
இந்த விவகாரம் வெளியில் கசிந்து அதிமுக தரப்பில் சிபிஐ விசாரணை நடத்தக் கேட்டு போராட்டம் அறிவித்த நிலையில், அவசர அவசரமாக கடந்த 7-ம் தேதி 2,3,4,5, ஆகிய மண்டலத் தலைவர் களிடமும் இரண்டு நிலைக்குழு தலைவர்களிடமும் அமைச்சர் நேரு நேரில் வந்து ராஜினாமா கடிதங்களை எழுதி வாங்கி இருக்கிறார். இதற்கு அடுத்த நாளே, மண்டலம் 1-ன் தலைவரான வாசுகியும் தனது ராஜினாமாவை மேயரிடம் சமர்ப்பித் திருக்கிறார். இந்த 7 பேரின் ராஜினாமாக்களும் உடனடியாக ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சொத்துவரி நிர்ணயம் மட்டு மல்லாது கட்டிட வரைபட அனுமதி, குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்பு, ஒப்பந்ததாரர்களுக்கு நெருக்கடி, சிறு வியாபாரிகளை மிரட்டுதல், மாநகராட்சி ஊழியர்களை தரக்குறைவாகப் பேசுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டு களும் தலைமைக்குப் போனதாலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
தற்போது ராஜினாமா செய்துள்ள நிலைக்குழு தலைவர்களில் ஒருவரான மூவேந்திரன் மீது புகார்கள் குவிந்ததால் அவரின் கீழ் செயல்பட்ட நகரமைப்புக் குழுவையே கடந்த ஆண்டு கமிஷனர் தினேஷ்குமார் முடக்கி வைத்தார். மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஷ்வரி, பாண்டிச்செல்வி, சுவிதா ஆகியோரின் கணவர்கள் தான் ஆக்டிங் மண்டலத் தலைவர்களாக செயல்பட்டு வந்தனர். முன்னாள் துணை மேயரான மிசா பாண்டியனின் மனைவி தான் பாண்டிச்செல்வி. பாண்டியனின் பராக்கிரமங்களை அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் பாண்டிச் செல்வியின் அலுவலகத்துக்கு பணிக்குச் செல்லவே தயங்கினர். இந்த மண்டலத்தில் தான் அதிகளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய குற்றப்பிரிவு விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
அழகிரி ஆதரவாளராக இருந்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பக்கம் வந்த மிசா பாண்டியன், பிடிஆர் தயவில் தான் மனைவிக்கு மண்டலத் தலைவர் பதவியை பிடித்ததாகச் சொல்வார்கள். மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவரான நூர்ஜஹான் தனது வார்டு பிரச்சினை தொடர்பாக மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வியிடம் கேள்வி எழுப்பியபோது அங்கு வந்த மிசா பாண்டியன், நூர்ஜகானை தரக்குறைவாகப் பேசினார். இதற்காக திமுக-விலிருந்து நீக்கப் பட்ட பாண்டியன், கட்சித் தலைமையிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் கட்சியில் ஒட்டிக் கொண்டு பழையபடியே டாம்பீகம் பண்ண ஆரம்பித்தார்.

இதேபோல் 2,4,5, மண்டலங்களிலும் மண்டலத் தலைவர்களை பார்த்த பிறகே எந்தச் சேவையையும் பொதுமக்கள் பெறமுடியும் என்ற நிலையே இருந்தது. இதில், மண்டலம்-2-ன் தலைவர் சரவண புவனேஷ்வரியும், மண்டலம்-4-ன் தலைவர் முகேஷ் சர்மாவும் சட்டமன்றத் தேர்தலில் சீட் கேட்குமளவுக்கு தங்களை வளப்படுத்திக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.
ராஜினாமா நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் மண்டலத் தலைவர்கள் அத்தனை பேருமே அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு புதிய கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் செய்வதில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். இதில் கோடிக் கணக்காண ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதில், மண்டலம் 1-ல் எவ்வித புகார்களும் இல்லாத நிலையிலும் அதன் தலைவர் வாசுகியும் முதல்வரின் கோபத்துக்கு ஆளாகி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ராஜினாமா செய்திருக்கும் மண்டலத் தலைவர்கள் அத்தனை பேருமே அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என ஆளாளுக்கு ஒருவரது சிபாரிசில் தான் மண்டலத் தலைவர்களாகி இருக்கிறார்கள். இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக ’முறைப்படி’ விசாரித்தால் சிபாரிசு செய்த விஐபி-க்களும் கைகட்டி பதில் சொல்ல வேண்டி வரலாம் என்கிறார்கள்.
ஏற்கெனவே, மேயர் இந்திராணியின் கணவர்பொன் வசந்தின் நடவடிக்கைகள் மீது அதிருப்தி கொண்ட திமுக தலைமை, அவரை கட்சியை விட்டு அதிரடியாக நீக்கியது. இப்போது எதிர்க்கட்சிகளின் வாயடைக்க மண்டலத் தலைவர்களை கூண்டோடு ராஜினாமா செய்ய வைத்திருக்கிறது. ஆக மொத்தத்தில், வெறும் வாயை மெல்லும் அதிமுக-வுக்கு வெல்லக்கட்டி கிடைத்திருக்கிறது!