மதுரை: மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவர்கள் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், புதியவர்கள் தேர்வு வரும் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது. அதனால், பதவிகளை எதிர்பார்த்த கவுன்சிலர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த வாசுகி, சரவண புவனேஷ்வரி, பாண்டிச் செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா ஆகிய 5 பேர் மண்டலத் தலைவர்களாக இருந்தனர். இவர்களில் வாசுகி அமைச்சர் பி.மூர்த்தி ஆதரவாளராகவும், சரவண புவனேஷ்வரி, முகேஷ் சர்மா மாநகர திமுக செயலாளர் கோ.தளபதி ஆதரவாளர்களாகவும், பாண்டிச்செல்வி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளராகவும், சுகிதா புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறன் ஆதரவாளராகவும் செயல்பட்டனர்.
இவர்களிடம் ராஜினாமா கடிதம் பெற்றதால் பதவிகள் காலியாக உள்ளன. மண்டலத் தலைவர்கள் பதவிகளைப் பிடிக்க ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள திமுக கவுன்சிலர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அந்தப் பதவிகளை பிடிக்க தங்கள் ஆதரவு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களை வட்டமிடத் தொடங்கினர்.
ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை மண்டலத் தலைவர் பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்கும் யோசனை திமுக தலைமைக்கு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை புதிய மண்டலத்தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லை’ என்றனர்.
திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘புதியவர்களைத் தேர்ந்தெடுத்தால், இப்பதவி கிடைக்காதவர்கள் ஏமாற்றமடைந்து அவர்கள் கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் சோர்வடைவார்கள். கட்சி மேலிடம் புதியவர்களை நியமிக்க ஆர்வம் காட்டாவிட்டாலும் திடீரென அறிவிப்பு வரவும் வாய்ப்புள்ளது. அப்படி அறிவிப்பு வந்து மண்டலத் தலைவர்களைத் தேர்வு செய்வதாக இருந்தால் மாநகராட்சியைப் பொருத்தவரை மாவட்டச் செயலாளர் பரிந்துரையை மட்டும் நம்பி தேர்வு செய்யாமல், குற்ற பின்னணி, குடும்ப பின்னணி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உளவுத்துறை மூலம் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளவே வாய்ப்புள்ளது.
ஏனெனில் சில பெண் மண்டலத் தலைவர்களின் கணவர்களே தலைவர்களாகச் செயல்பட்டனர். அவர்கள் வரம்பு மீறி நிர்வாகத்தில் தலையிட்டுள்ளனர். அதுவும் இனி முழுமையாகத் தடுக்கும் விதமாகத்தான் நியமனம் இருக்கும்’ என்றனர். இதற்கிடையே ராஜினாமா செய்த மண்டலத் தலைவர்களின் அறைகளுக்கு பூட்டு போடப்பட்டது.