மதுரை: பிரதான சாலைகள், குடியிருப்பு தெருக்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் போஸ்டர் ஓட்டினால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுவரொட்டிகள் ஒரு காலத்தில் மற்றவர்களுக்குத் தகவல்களைத் தெரிவிப்பதற்கு உதவியாக இருந்தது. தற்போது மதுரை மாநகரில் சுவரொட்டிகள் பெரும் தொந்தரவாகவும், குப்பைகள் அதிகரிப்பதற்கும் முக்கிய காரணமாகவும் உள்ளது. எம்ஜிஆர் – சிவாஜி காலம் தொடங்கி அஜித் – விஜய் காலம் வரை, தங்கள் அபிமான நடிகர்கள் மீது வைத்துள்ள பாசத்தைப் பொதுவெளியில் காட்டுவதற்கு ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் போஸ்டர்களை ரசிகர்கள் அதிகளவு ஒட்டுகின்றனர்.
சினிமா ரசிகர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால், திருமணம், காது குத்து உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகள் முதல் அரசியல் விழாக்கள் வரை மற்றவர்களைத் திரும்பிப் பார்க்க வைப்பதற்காகச் சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரையும் மதுரையில் எதற்கெடுத்தாலும் போஸ்டர் ஓட்டும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது.
இந்த போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் கிழிப்பதும், மீண்டும் மீண்டும் பொதுமக்கள் ஒட்டுவதுமாக மதுரை மாநகராட்சியின் குப்பை குவியலுக்கு இந்த போஸ்டர் கலாச்சாரமும் முக்கிய காரணம் என்பதை ஆணையாளர் சித்ரா கண்டறிந்து, தற்போது அதைத் தடுக்க மாநகராட்சியில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்துள்ள அந்த தீர்மானத்தில், ‘‘மாநகராட்சி 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் பிரதான சாலைகள், சென்டர் மீடியம், குடியிருப்பு தெருக்கள், மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது. இதனால் மதுரை நகரின் அழகு கெடுவதோடு குப்பைகள் அதிகமாகி மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.
பொது சுகாதாரத்திற்குப் பிரச்சினைகள் உண்டாகிறது. எனவே, போஸ்டர் ஓட்டி விளம்பரம் செய்பவர்கள், முதல் தடவையாகத் தெரியாமல் ஓட்டினால் எச்சரிக்கை செய்து ரூ.1000 அபராதம் விதிக்கவும், இரண்டாவது தடவையாக ஓட்டினால் ரூ.5 ஆயிரமும், மூன்றாவது முறையாக ஓட்டினால் போலீஸார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதை ஒழுங்குபடுத்தி முறைப்படுத்திட பொது சுகாதார அவசியம் கருதி தகவல்களை அறிவிக்க பொது தகவல் பலகையைப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வேண்டப்படுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டர் ஓட்டுவதை ஒழுங்குபடுத்தி முறைப்படுத்திட மாநகராட்சி ஆணையாளர் சித்ரா எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு, கவுன்சிலர்கள் வரவேற்று தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.