கோவை: மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் மிகப் பழமையான மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் மீது, இந்து விரோத திமுக அரசு அடக்குமுறையை ஏவி விட்டிருக்கிறது. கடந்த மே 2-ம் தேதி சென்னை, காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற, உலக சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க மதுரை ஆதீனம் காரில் சென்றபோது உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்தில் சிக்கியது. தன்னை கொல்ல நடந்த சதி என்றும், விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்களின் அடையாளங்களையும் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு செய்த திமுக அரசு, அவரை கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டது. அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம், அவர் வசிக்கும் இடத்துக்கே சென்று விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறி மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென, உயர் நீதிமன்றத்தில் காவல் துறை மனு தாக்கல் செய்துள்ளது.
வயது முதிர்ந்த, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை ஆதீனத்தை எப்படியாவது கைது செய்து, கொடுமைப்படுத்த வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக இருப்பது தெரிகிறது. அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் கூட நடக்காத கொடுமைகள் எல்லாம், திமுக ஆட்சியில் நடக்கிறது. மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை திமுக அரசு கைவிட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.