மதுரை: குற்ற வழக்கில் தொடர்புடைய மதுரை ஆதீனம் பதவி விலக வேண்டும், அந்த இடத்தில் தன்னை நியமிக்க வேண்டும் என ஆதீன மட ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்புரான், மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தார்.
இதுகுறித்து அளித்த மனு: மதுரை ஆதீன மடத்தின் தம்புரானாக குருமகா சந்நிதானத்தின் கரங்களால் தீட்சை பெற்று, கடந்த 2018 ஜூலை முதல் பணியாற்றி வருகிறேன். தற்போது, 293-வது ஆதீனத்தின் கீழ் தம்புரானாகப் பணிபுரிந்து வருகிறேன்.
வேறு ஒருவருக்கு பட்டம்: இந்நிலையில் 292-வது குருமகா சந்நிதானம் விருப்பப்படி, அடுத்த ஆதீனமாக நான்தான் வர வேண்டும். ஆனால் தற்போதைய ஆதீனம், 292-வது குருமகா சந்நிதானம் மற்றும் தருமபுரம் ஆதீனத்தின் கட்டளையை நிறைவேற்றாமல் வேறு ஒருவருக் குப் பட்டம் சூட்ட திட்டமிட்டுள்ளார்.
எனவே, தருமபுரம் ஆதீனத்துடன் ஆலோசனை செய்து 292-வது குருமகா சந்நிதானத்தின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். மேலும், மதுரை ஆதீனத்தின் மீது குற்ற வழக்கு உள்ளதால் அவராகவே பதவி விலக வேண்டும்.
மதுரை ஆதீனம் நியமனத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு, 292-வது குருமகா சந்நிதானம் விருப்பப்படி அடுத்த வாரிசாக என்னை நியமிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, இவர் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 31-ம் தேதி 292-வது மதுரை ஆதீனத்தின் சமாதி முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.