மதுரை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்புரான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மதுரை முனிச்சாலை அருகே 292-வது ஆதீனத்தின் சமாதி உள்ளது. இதன் முன்பாக அமர்ந்து ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்புரான் நேற்று தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் 2018 ஜூலை முதல் 292-வது ஆதீனமாக இருந்த குருமகா சன்னிதானத்தின் கரங்களால் தீட்சை பெற்று, மதுரை ஆதீன மடத்தின் தம்புரானாகப் பணிபுரிந்து வருகிறேன். 292-வது ஆதீனம் 2021-ல் மகாசித்தி அடைந்த பிறகு, தற்போதைய 293-வது ஆதீனத்தின் கீழ் தம்புரானாகப் பணிபுரிந்து வருகிறேன்.
மதுரை ஆதீன மடத்தின் 292-வது குருமகா சன்னிதானம் விருப்பப்படி, அடுத்த ஆதீனமாக நான்தான் வரவேண்டும். ஆனால் தற்போதைய ஆதீனம், 292-வது குருமகா சன்னிதானம் மற்றும் தருமபுரம் ஆதீனத்தின் கட்டளையை நிறைவேற்றாமல் வேறு ஒருவருக்குப் பட்டம் சூட்டத் திட்டமிட்டுள்ளார்.
மதுரை ஆதீனம் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தருமபுரம் ஆதீனத்தின் ஆலோசனைப்படியே நடக்க வேண்டும். தற்போதைய மதுரை ஆதீனம், தருமபுரம் ஆதீனத்துடன் ஆலோசனை செய்து 292-வது குருமகா சன்னிதானத்தின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், விஷ்வலிங்க தம்புரானிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அவர் போராட்டத்தைக் கைவிட்டார்.