சென்னை: போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால் மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸார் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஆதீனம் தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்க காரில் வந்த மதுரை ஆதீனத்தின்மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக மாநாட்டில் பேசிய ஆதீனம் தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாகவும், பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் சென்னை சைபர் கிரைம் போலீஸார் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆதீனத்துக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அவர் போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி சென்னை போலீஸார் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நேற்று நடந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், மதுரை ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார். எனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினார். அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக மதுரை ஆதீனம் வரும் ஜூலை 30-க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
அண்ணாமலை கண்டனம்: இதனிடையே தனது எக்ஸ் தளத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக சுவாமிகளுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி, தமிழக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, குடல் இறக்கம் அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனத்தை, இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று, விசாரணை என்ற பெயரில் சுமார் ஒரு மணி நேரம் துன்புறுத்திவிட்டு, தற்போது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று திமுக அரசின் காவல்துறை கூறுவது உள்நோக்கம் கொண்டது.
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. பத்து வயது குழந்தை மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கிட்னி திருடும் திமுக கும்பலை விசாரிக்க நேரமில்லை. காவல்துறையினருக்கே திமுகவினரால் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது.
ஆனால், உப்புசப்பில்லாத காரணங்களைக் கூறி, மதச்சார்பின்மை என்ற பெயரில் யாரையோ திருப்திப்படுத்த நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனத்தை தொடர்ந்து துன்புறுத்தும் போக்கை, திமுக அரசின் காவல்துறை கைவிட வேண்டும். உடனடியாக, அவரது முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுவைத்திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.