சென்னை: விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால் மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஆதீனம் தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்க காரில் வந்த மதுரை ஆதீனத்தின் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக மாநாட்டில் பேசிய ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாகவும், பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இது குறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆதீனத்துக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அவர் போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை போலீஸார் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக இன்று நடந்தது.
அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், மதுரை ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார். எனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினார். அதையடுத்து நீதிபதி, இது தொடர்பாக மதுரை ஆதீனம் வரும் ஜூலை 30-க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.