மதுரை: உளுந்தூர்பேட்டை கார் விபத்து விவகாரத்தில் மதுரை ஆதீனத்திடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை சைபர் கிரைம் போலீஸார் மதுரையில் விசாரணை நடத்தினர்.
கடந்த 2021-ல் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்று சைவ சமய பணிகளை செய்து வருகிறார். மே 2-ம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த சித்தாந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை ஆதீனம் காரில் சென்றபோது, உளுந்தூர்பேட்டை பகுதியில் சாலையில் மற்றொரு கார், தனது கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி தன்னை சிலர் கொலை செய்ய முயன்றதாக குற்றச்சாட்டினார். குறிப்பாக ‘தொப்பி, தாடி வைத்தவர்கள் ’ என, தன் புகாரில் கூறி இருந்தார்.
விபத்து குறித்த சிசிடிவி காட்சியை காவல்துறை தரப்பு வெளியிட்டு தவறான தகவல்களை ஆதீனம் தரப்பினர் வெளியிடுவதாக அறிக்கை வெளியிட்டனர். தவறான தகவல் பரப்பி, மதமோதலை தூண்டும் வகையில் பேசிய ஆதீனத்தின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிய கோரி சென்னை அயனாவரம் வழக்கறிஞர் ராஜேந்திரன் அளித்த புகாரில் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸார், மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி மதுரை ஆதீனம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். “அவருக்கு 60 வயதுக்கு மேல் இருப்பதால் அவர் நேரில் ஆஜராக கட்டாயமில்லை. காவல்துறை நேரில் சென்று விசாரிக்கலாம், விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும்” என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல்துறையினர் மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே தெற்கு ஆவணி மூல வீதியிலுள்ள ஆதின மடத்திற்கு நேரில் சென்றனர். சைபர் கிரைம் ஆய்வாளர் பத்மகுமாரி தலைமையிலான 3 போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
40-க்கும் மேற்பட்ட கேள்விகளை அவரிடம் கேட்டு, அதற்கான பதில்களை பதிவு செய்தனர். அவரது வழக்கறிஞர்களும் பாஜக வழக்கறிஞர்களும் உடனிருடந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்தது. ஆதின மடத்துக்குள் பெண் காவல் ஆய்வாளர் முதன் முறையாக விசாரணைக்கு வந்ததால் மதுரை விளக்குத்தூண் காவல் உதவி ஆணையர் சூரக்குமார் உள்ளிட்ட போலீஸாரும் மடத்திற்கு வந்தனர்.
மாநகர பாஜக மாவட்ட தலைவர் மாரிசக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும் அங்கு சென்றிருந்தனர். ஒரு கட்டத்தில் விசாரணைக்கு இடையூறு கருதி யாரையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. உடல் நிலை பாதிப்பால் எழுந்திருக்க முடியாத சூழலில் வழக்கு ஆவணங்களை எடுத்து கொடுக்க உதவியாளரை உதவிக்கு வைக்கவும் போலீஸார் அனுமதிக்கவில்லை என, ஆதீனம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கென சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
இது குறித்து ஆதீனம் வழக்கறிஞரான ராமசாமி மெய்யப்பன் கூறுகையில், ‘ஆதீனத்திடம் சைபர் கிரைம் காவல்துறையினர் தனியாக விசாரணை நடத்தினர். வழக்கறிஞர்களை அனுமதிக்கவில்லை. 3 நாட்களுக்கு முன் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த நிலையில், சைபர் கிரைம் போலீஸார் விசாரித்துள்ளனர். உதவிக்கு ஒருவரை ஏற்க மறுத்தனர். ஆனாலும், அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்’ என்றார்.
பாஜக தலைவர் அறிக்கை : பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘ காவல்துறை மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்தியதன் மூலம் மத குருமார்கள், ஆன்மீக பெரியோர்களை சொல்ல முடியாத இன்னலுக்கு உட்படுத்துகிறது திமுக அரசு. தனி மனிதனைப் போல மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. காவல்துறையினர் மூலம் மதுரை ஆதீனத்திற்கு தொந்தவு செய்கின்றனர்’ என குற்றம் சாட்டியுள்ளார்.