மதுரை: மதுரையிலுள்ள 2 அமைச்சர்களில் ஒருவர் தற்போது அமைதியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சத்தில் கூடுதல் கட்டிடத்துக்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இப்பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பணியை தொடங்கி வைத்துள்ளோம். இப்பகுதியினர்தான் இந்த செல்லூர் கே.ராஜூவை ஊருக்கும், உலகுக்கும் தெரிய வைத்தனர்.
மதுரை பந்தல்குடி வாய்க்கால் எங்களது ஆட்சியில் சீரமைக்கப்பட்டது. முதல்வர் மதுரையில் ரோடு ஷோ வந்தபோது, அவரது கண்ணில் படக்கூடாது என கால்வாயை துணிகளை கட்டி மறைத்தனர். இதுபற்றி நான் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தேன். முதல்வரும் காரைவிட்டு இறங்கி கால்வாயை பார்த்துவிட்டு சீரமைக்க ரூ.86 கோடி ஒதுக்கியதாக கூறி சென்றுள்ளார். பந்தல்குடி கால்வாய்க்கு விடிவு காலம் பிறந்தால் நல்லது. இன்னும் குறைந்த காலமே இருப்பதால் பணிகளில் 2 அமைச்சர்களும் தீவிரம் காட்டவேண்டும். மதுரையில் உள்ள இரு அமைச்சர்களில் ஒருவர் அமைதியாகிவிட்டார்.
இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பொதுச் செயலாளர் உத்தரவிட்டால் பங்கேற்போம். இன்னும் வைகை ஆற்று வடக்கு, தெற்கு கரை ரோடுகளை முழுமையாக முடிக்கவில்லை. திருமாவளவன் – வைகைச்செல்வன் சந்திப்பு ஓர் அரசியல் பண்பாடு. என்ன கூட்டணி இருந்தாலும் மக்கள் தான் எஜமானர்கள். அதிமுக தலைமையில்தான் ஆட்சி என அமித் ஷா, நயினார் நாகேந்திரன் சொல்லிவிட்டனர். விஜய் அதிமுக கூட்டணிக்கு வராதது வருத்தமளிக்கவில்லை. நாங்கள் மக்களோடு மட்டுமே கூட்டணி.
அமைச்சர் பி.மூர்த்தி வழங்கும் நலத்திட்டம் மூலம் மேற்கு தொகுதி மக்கள் பயனடைவர். சின்ன கேரியர் அல்ல, பெரிய ஹாட் பாக்ஸ் ஆக கொடுங்கள். மதுரைக்கு முதல்வர் வந்தபோது 3 மணி நேரம் காக்கவைத்து ரூ.200 மட்டுமே வழங்கியுள்ளனர். மீண்டும் முதல்வர் வரும்போது கூடுதல் பணம் கொடுக்க சொல்லுங்கள்” என்று அவர் கூறினார்.