மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை பாண்டி கோயில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ல் நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி அறுபடை வீடுகளை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று திறந்து வைத்தார்.
முருகனின் அறுபடை வீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை முருகன் கோயில்களின் கோபுரங்களுடன் தனித்தனியாக மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி கோயில்களில் அறுபடை வீடுகளின் மூலவர் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல்களை மாதிரி அறுபடை வீடுகளில் அருள்பாலிக்கும் மூலவர் கையில் பிடித்தபடி காட்சியளிக்கிறார். திருப்பரங்குன்றம் முருகன் அமர்ந்தபடியும், பழனி முருகன் ராஜாங்க அலங்காரத்திலும் காட்சியளிக்கிறார்.
மாதிரி கோயில்களில் அறுபடை வீடுகளின் தூண்கள், சிற்பங்கள் அச்சிடப்பட்ட பிளக்ஸ் ஒட்டப்பட்டு கோயில் போல் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. மாதிரி அறுபடை வீடுகளை ஜூன் 22 வரை பொதுமக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் காலை, மாலையில் 2 மணி நேரம் பூஜை செய்யவும், பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாதிரி அறுபடை வீடுகளுக்கு வரும் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இந்து முன்னணியினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாதிரி அறுபடை வீடுகளில் வழிபட வரும் பக்தர்கள் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் பாடி வருகின்றனர்.
முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ல் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் சரியாக 6 மணிக்கு ஒரே நேரத்தில் அனைவரும் கந்த சஷ்டி மற்றும் திருப்புகழ் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.