மதுரை: சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தொடர்ந்து இரு முறை போட்டியிட்டு தான் வெற்றி பெற்ற மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று மாநகராட்சி அதிகாரிகளுடன், வீதி வீதியாக சென்று தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மேயர், கவுன்சிலர்களை வர வேண்டாம் என்று அவர் கூறியதால், கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மத்திய தொகுதியில் 2016, 2021 ஆகிய இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2026-ம் ஆண்டு தேர்தலிலும் தொடர்ந்து இதே தொகுதியில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற நாள் முதல் 6 மாதத்துக்கு ஒரு முறை தனது தொகுதி செயல்பாட்டு அறிக்கையை மக்களிடம் சமர்ப்பித்து அவர்களின் கோரிக்கைகளை, குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தொகுதிக்குள் ஆய்வுக்கும், மக்களை சந்திக்கவும் செல்லும்போது அமைச்சர் பழனிவேல் ராஜன், இதுவரை மாநகராட்சி அதிகாரிகளுடன் மேயர், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகளை உடன் அழைத்து செல்வார். ஆனால், வழக்கத்துக்கு மாறாக, இன்று மத்திய தொகுதியில் உள்ள 55-வது வார்டு மக்களை சந்தித்து குறைகளை கேட்க சென்றபோது, அவருடன் எப்போதும் உடன் வரும் மேயர் இந்திராணி, சில முக்கிய கவுன்சிலர்கள் வரவில்லை. அவர்களை அமைச்சர் பழனிவேல் தியாராஜனே தன்னுடன் வர வேண்டாம் என்று கூறி, அவர்களை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. பகுதி செயலாளர், கிளை செயலாளர் மட்டும் அமைச்சருடன் சென்றனர்.
அமைச்சர் இந்த ஆய்வின்போது 55-வது வார்டு பகுதியில் உள்ள மேல மாசி வீதியில் உள்ள விநாயகர் கோவில், நாடார் லேன், மக்கான் தோப்பு தெரு, தலை விரிச்சான் சந்து, மணி அய்யர் தெரு, மணி நகரம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது குடிநீர், தெரு விளக்கு, மின்சார வயர்கள் சரி செய்தல் உள்ளிட்ட உடனடி பணிகளை உடனே நிறைவேற்றி தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து சாலை வசதிகளில் உள்ள குறைபாடுகள், தனியார் கட்டுப்பாட்டில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சி மூலம் சாலை வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் ஆலோசித்தார். இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், துணை ஆணையர் ஜெயினுலாப்தீன், உதவி ஆணையர் பிரபாகரன், நிர்வாகப் பொறியாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சொத்து வரி முறைகேடு விவகாரம் காரணமா? – சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் கணவர் பொன்.வசந்த் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரையும், அதில் தொடர்புடைய மற்ற கவுன்சிலர்களுடன் சமீப காலமாக அமைச்சர் பழனிவேல் தியாராஜன், கடந்த காலத்தை போல் தன்னுடன் நெருங்க விடுவதில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, ”இன்று 55-வது வார்டில் மட்டும் மக்களை அமைச்சர் சந்தித்துள்ளார். தொடர்ந்து 5-ம் தேதி மீண்டும் தொகுதிக்குட்பட்ட 22 வார்டுகளில் தொடர்ச்சியாக இதுபோல் மக்களை சந்திக்க உள்ளார். மேயர், கவுன்சிலர்களை மட்டுமில்லாது பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்களை கூட அவர் மக்களை சந்திக்கும்போது தன்னுடன் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
யாரையும் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் அமைச்சருக்கு இல்லை. கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநதிகள் வந்தால் அவர்கள் முன்பு அமைச்சரிடம் உள்ளூர் மக்கள், தங்கள் பகுதி பிரச்சனைகளையும், குறைகளையும் சொல்ல தயங்குவார்கள், பயப்படுவார்கள். அதற்காகவே அமைச்சர் அவர்களை வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார். அதை கவுன்சிலர்களும், கட்சியினரும் புரிந்து கொண்டார்கள். கட்சிக்குள் பிடிக்காதவர்கள் இதை அரசியலாக்குகிறார்கள்” என்று ஆதரவாளர்கள் கூறினர்.