மதுரை: மதுரை மாநகராட்சி நிர்வாகம் தொடர் ‘சர்ச்சை’களில் சிக்கி வருவதால் அதிகாரிகளால் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.
மதுரை மாநகராட்சி நகராட்சியாக இருந்தபோது, 1924-ம் ஆண்டில் அப்போதைய ஆங்கிலேய அரசால் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டம், அப்போதைய மதுரையின் மக்கள் தொகை (ஒரு லட்சம்) அடிப்படையாகக் கொண்டு வைகை ஆற்று நீரை மட்டும் மூல ஆதாரமாக கொண்டு செயல்படுத்தப்பட்டது.
அதன்பிறகு 1971-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, வைகை அணையில் இருந்து 115 எம்எல்டி தண்ணீர், வைகை ஆற்றின் படுகையில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூலம் 20 எம்எல்ஏடி தண்ணீர், ஒருங்கிணைக்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 11 எம்எல்டி தண்ணீர், நகர் பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூலம் 10 எம்எல்டி தண்ணீர் என மொத்தம் 156 எம்எல்டி தண்ணீர் மாநகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை என்பதால், கடந்த அதிமுக ஆட்சியில் பெரியாறு லோயர்கேம்ப் பகுதியில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டம் ரூ.1,609.69 கோடியில் அம்ரூத் மற்றும் ஆசிய வங்கி நிதியுதவி மூலம் தொடங்கப்பட்டு பணிகள் நடக்கிறது. இப்பணிகள், புறநகர் இணைப்பு வார்டுகளில் முழுமையாக முடிக்கப்பட்டு பரிசோதனை ஓட்டமும் நிறைவு பெற்று குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
மற்ற வார்டுகளிலும் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், மாநகராட்சியின் ஒருபுறம் மக்கள் இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீரை தடையின்றி பெற்று வருவதும், மற்றொருபுறம் குடிநீர் விநியோகம் பெற முடியாமலும் தவிக்கின்றனர்.
கடந்த 3 மாதத்திற்கு முன்பிருந்த வேகம், தற்போது இந்த திட்டத்தில் இல்லை என்றும், அதேவேகத்தில் பணிகள் நடந்திருந்தால் இந்த திட்டம் தற்போது முழுமையாக நிறைவு பெற்றிருக்கும். சொத்துவரி முறைகேடு, அதற்கு முன் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் போன்ற பல்வேறு காரணங்களால், இந்த குடிநீர் திட்டப்பணிகளில் முழுகவனத்தை மாநகராட்சியால் செலுத்த முடியவில்லை.
கட்சிகளின் கவனமும் தேர்தலை நோக்கி சென்றுவிட்டன. ஆணையர் சித்ரா, இந்த பணியில் முன்பிருந்த வேகத்தை தொடரவும், அதற்கான ஆய்வுக்கூட்டங்களை முடுக்கிவிட்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
டிசம்பரில் தொடக்கவிழா நடத்த திட்டம்: அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, “இந்த திட்டத்தில் மொத்தம் 38 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்ட திட்டமிடப்பட்டு 35 தொட்டிகள் கட்டி முடித்து, அதில் பெரியாறு கூட்டுக் குடிநீர் தொட்டிகளில் குடிநீர் ஏற்றி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
விளாங்குடி செம்பருத்தி நகர், செல்லூர் லாரி நிறுத்தம் அருகே ஆகிய இடங்களில் 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகளின் கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. வைகை கரை 41-வது வார்டில் உள்ள மீனாட்சி நகரில் குடிநீர் தொட்டி கட்டி, அதில் குடிநீர் ஏற்ற ஆயத்தப் பணிகள் நடக்கின்றன. மொத்தமுள்ள 5 பேக்கேஜ்களில், 4 பேக்கேஜ்-களில் 97 சதவீதம் பணிகளும், 5-வது பேக்கேஜில் 80 சதவீதம் பணிகளும் முடிந்துள்ளது.
தாமதமாக டெண்டர் விடப்பட்டதாலே இந்த தாமதம். 60 சதவீதம் வீடுகளுக்கு, தற்போது இந்த திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், பழைய மேல்நிலை குடிநீர் தொட்டிகளுடன், புதிய குடிநீர் குழாய்களை இணைப்பதில் சில இடங்களில் நீடிக்கும் பணிகள் தாமதமடைந்துள்ளது. டிசம்பரில் தொட்க விழா நடக்கும்” என்றனர்.