மதுரை விரகனூர் சுற்றுச் சாலையில் இன்று திமுக மாணவரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தக்காக மதுரை – ராமேசுவரம் பழைய தேசிய நெடுஞ்சாலையை மறைத்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. வாகனங்கள் மாற்று வழியில் பல கி.மீ. தூரம் சுற்றிச் சென்றதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்பட்டனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் மதுரை விரகனூர் சுற்றுச் சாலை வழியாகச் செல்கின்றனர். இதனால் நாள் முழுவதும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. மதுரையிலிருநது புளியங்குளம், சிலைமான், மணலூர், திருப்புவனம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பகுதி களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் தினமும் இப்பேருந்து களில் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில், விரகனூர் சுற்றுச்சாலை அருகே மதுரை – ராமேசுவரம் பழைய தேசிய நெடுஞ்சாலையை மறைத்து திமுக மாணவரணியினர் இன்று மேடை அமைத்திருந்தனர். தார்ச் சாலையை பெயர்த்து கம்புகள் ஊன்றி ஆர்ப்பாட்டத்துக்கான பதாகைகளை வைத்திருந்தனர். நேற்று இரவு முதல் இச்சாலையில் வாகனங்கள் செல்ல போலீஸார் தடை விதித்தனர்.
சாலையை மறைத்து மேடை அமைக்கப்பட்டிருந்ததால் மாற்று வழியில் வாகனங்களை போலீஸார் திருப்பிவிட்டனர். இதனால் பல கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், பொதுமக்களுக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் எப்படி அனுமதி வழங்கினார்கள் எனத் தெரிய வில்லை. ஆளும் கட்சி என்பதாலும், மத்திய அரசை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டம் என்பதாலும் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதைப் பார்த்து, எதிர்காலத்தில் மற்ற கட்சியினரும், இதே இடத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதி கோருவர். இதனால் எங்களை போன்ற வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் தான் அதிகம் பாதிக்கப்படுவோம். இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்குவதை போலீஸார் தவிர்க்க வேண்டும் என்று கூறினர்.