சென்னை: மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’ என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம். அதற்காக மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நம் தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்கள் அரசியல் இயக்கமான தவெக மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் தேர்தல் அரசியல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்பட போகிறது. நமது கனவு நனவாக, இலக்கை எட்ட புரட்டிப்போட போகும் புரட்சி நிகழ இன்னும் சில மாதங்களே உள்ளன.
1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம். மாபெரும் மக்கள் சக்தியான நீங்கள் இந்த திருப்புமுனை தருணத்தை நிரூபிக்க போவது நிச்சயம். இதை 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக இருந்து, தினம் தினம் மக்கள் மனம் அறிந்து உணர்ந்து வரும் நாம் சொல்வதில் அடர்ந்த ஆழ்ந்த உண்மை இருப்பதை அனைவரும் அறியத் தான் போகின்றனர்.
தமிழக மக்களை உயிராக போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்றி தெரியும். உங்கள் மீதான உள்ளன்புமிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றை சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளி சிறார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர், நம் கழக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் தந்து மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்கு திரும்பும் போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவ கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்க வேண்டும். தவெக, தகுதியும் பொறுப்பு மிக்க ஒரு அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை.
மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’ என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம். மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில் நம்மால் நிகழப்போவது நிஜம். எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம்.
உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வு ததும்பும் மதுரை மண்ணில், இதயம் திறந்து இரண்டு கைகளையும் விரித்து காத்திருப்பேன். மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.
2-வது மாநாடு மீது எகிறும் எதிர்பார்பு: மதுரையில் வரும் 21-ம் தேதி தவெக 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. முதல் மாநாடு கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டுக்கு எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக மக்கள் கூடினர். மேலும், முதல் மாநாட்டிலேயே விஜய் முழுக்க முழுக்க ஆளும் திமுகவை சரமாரியாக சாடியது அரசியல் களத்தில் கவனம் ஈர்த்தது. இப்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சூழலில் நடைபெறவுள்ள இந்த மாநாடு தவெக அரசியல் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாநாடு தொடர்பாக, விஜய் ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையில், “மதுரையில் நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகுக்கு மீண்டும் உணர்த்துவோம்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய 2-வது அறிக்கையில், “மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’ என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம். மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.