மதுரை: மதுரையில் வணிக வளாகம் முன்பு கடைகளை அகற்றுவதற்கு திமுகவினர் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரை மாநகராட்சியில் வீடுகளுக்கு சொத்து வரி நிர்ணயிப்பதில் நடந்த பல கோடி முறைகேட்டைக் கண்டித்து பாஜக சார்பில் கோ.புதூர் பேருந்து நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார்.
இதில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: 2026 தேர்தலில் முருகன் சூரசம்ஹாரம் செய்வார். மதுரைக்கும், திமுவுக்கும் ராசி கிடையாது. ஆனால், மதுரையில் பாஜகவின் எல்லா கூட்டங்களும் வெற்றிகரமாக அமைந்துள்ளன. 2026 தேர்தலில் மீனாட்சியின் ஆட்சி தமிழகத்தில் மலரும். மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். கே.கே. நகர் வணிக வளாகம் முன்பு கடைகளை அகற்றுவதற்காக, வணிக வளாக உரிமையாளரிடம் திமுகவினர் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். வீடுகளுக்கு சதுரஅடியை குறைவாக கணக்கிட்டு வரி முறைகேடு செய்துள்ளனர்.
மேலும், கமிஷனர், துணை கமிஷனர் பயன்படுத்தும் சாப்ட்வேரை இவர்களே பயன்படுத்தி, ஊழல் செய்துள்ளனர். திமுகவைச் சேர்ந்த தொழிலதிபரிடமே ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். புதூர் வண்டிப்பாதை ரோட்டில் 15 நாட்களுக்கு முன்பு பத்திரப்பதிவில் பெரிய ஊழல் செய்துள்ளனர். துணை மேயர் நடைபாதையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதை, இவர்களால் அப்புறப்படுத்த முடியவில்லை.
சிவகங்கையிலும் திமுகவினர் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் நடந்துள்ளது. மதுரை மண் கண்ணகிக்கு நீதி கிடைத்த மண். தற்போது நாங்கள் நீதி கேட்கிறோம். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். எல்லோரும் ஓரணியில் நின்று, பொய்களைக் கூறிக் கொண்டிருக்கும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.