விருதுநகர்: சாத்தூரில் நடந்த மதிமுக கூட்டத்தில் காலி இருக்கைகளை படம் பிடித்த ஊடகத்தினரை “கேமராவை பிடுங்கி உடைத்துப் போடுங்கள்” என ஆவேசத்துடன் வைகோ உத்தரவிட்டார். தொடர்ந்து ஊடகத்தினரை கட்சியினர் தாக்கினர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மதிமுக நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் துரை வைகோ எம்.பி. பேசி முடித்ததும், சென்னை செல்ல அவசரமாகப் புறப்பட்டார். அவரைத் தொடர்ந்து கூட்டத்திலிருந்த பலரும் அரங்கிலிருந்து வெளியேறினர். தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போதும், அரங்கிலிருந்த ஏராளமானோர் வெளியேறினர். இதனால் ஆவேசமடைந்த வைகோ “உள்ளே வந்து உட்காருங்கள், இல்லையெனில் வீட்டுக்குப் போங்கள்” என கடிந்துகொண்டார்.
அப்போது, அரங்கில் காலியாக இருந்த இருக்கைகளை ஊடகத்தினர் சிலர் வீடியோவில் பதிவுசெய்ததை கவனித்த வைகோ கோபமடைந்து, “காலி சேரை காலிப் பயலுங்கதான் படமெடுப்பாங்க, அவங்க கேமராவை பிடுங்கி உடைத்துப் போடுங்கள்” என கட்சியினருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, அங்கிருந்த மதிமுகவினர் சிலர் ஊடகத்தினரை தாக்கத் தொடங்கினர். இதில், தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஜெயராம், நிருபர்கள் மணிவண்ணன், கருப்பசாமி ஆகியோர் காயமடைந்தனர். பின்னர் மூவரும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஒளிப்பதிவாளர் ஜெயராம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதையடுத்து, வைகோ உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகர் எஸ்.பி. கண்ணனிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, “சாத்தூரில் நடந்த நிகழ்வுக்கு தனிப்பட்ட முறையிலும், கட்சி சார்பிலும் பத்திரிகை, ஊடக நண்பர்களிடம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “கூடாநட்பு கேடாய் முடியும் என்பதுபோல திமுகவுடன் கூட்டணிவைத்து, தனது நிதானத்தை வைகோ இழந்துவிட்டாரோ எனத் தோன்றுகிறது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில், “எந்த வாரிசு அரசியலை எதிர்த்து திமுகவிலிருந்து வைகோ வெளியேறினாரோ, அதே வாரிசு அரசியலைப் புகுத்தியதால்தான் இந்த தடுமாற்றமும், தோல்வி பயமும். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களையும், அவர்களை ஏவிவிட்ட வைகோ மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது முதல்வர் ஸ்டாலினின் கடமை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக முன்னாள்மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.