தேர்தலில் கேட்கும் தொகுதிகள் கிடைக்காவிட்டால் திமுக கூட்டணியை விட்டு செல்ல மாட்டோம். அதே நேரத்தில் குறைந்தபட்ச சுய மரியாதை யை எதிர்பார்ப்போம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஈரோட்டில் ஜூன் 22-ம் தேதி(இன்று) நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மண்டல ரீதியாக செயல் வீரர்கள் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பொதுச் செயலாளர் வைகோ வெளியிடுகிறார். பட்டம், பதவிகளு க்கு அப்பாற்பட்டு செயல்படுபவர்கள் மதிமுகவினர். நான் மத்திய அமைச்சராகும் சூழல் தற்போது இல்லை. எதிர்காலம் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது.
கூட்டணியில் எல்லோருக்கும் ஒரே கருத்து இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் ஒரு பொதுநோக்குடன் நாங்கள் கூட்டணியில் உள்ளோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 12 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றால் தான், மதிமுகவுக்கு அங்கீகாரம் கிடைக்கும். எனவே, கூடுதல் எண்ணிக்கை யில் சீட் கேட்க வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் கூட்டணியின் பொதுநோக்கத்துக்கு எந்த பாதகமும் வந்துவிட கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு தான் முடிவெடுப்போம். தேர்தலில் கேட்கும் தொகுதிகள் கிடைக்கவில்லையென்றால், திமுக கூட்டணி யை விட்டு செல்ல மாட்டோம். அதே நேரத்தில் குறைந்தபட்ச சுயமரியாதையை எதிர்பார்ப்போம்.
நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறும் எந்த சூழலும் இல்லை. எங்களுடன் பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதுகுறித்த சிந்தனை கூட கிடையாது. ஆட்சியில் பங்கு என்பது நல்ல விஷயமாக இருந்தாலும், அது பல குழப்பங்களைத் தான் உண்டாக்கும். வைகோவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும் என்று எங்களுக்கு விருப்பம் உள்ளது. இது குறித்து அவர் தான் முடிவெடுப்பார்.
முருகனை வழிபட விரும்பினால் அறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு கோயிலுக்கு சென்று வழிபடுவேனே தவிர, ‘செட்டிங்’ போட்ட இடத்துக்கு சென்று வழிபட வேண்டிய அவசியம் இல்லை. திராவிடக் கட்சிகளில் மட்டுமே வாரிசு அரசியல் இருப்பதாக கூறுவது தவறு. நாடு முழுவதும் பாஜக உட்பட பல்வேறு கட்சிகளிலும், ஆட்சியிலும் வாரிசுகள் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.