சென்னை: மதிமுகவில் துணை பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யா, கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார். மதிமுக துணை பொதுச்செயலாளராக பதவி வகித்தவர் மல்லை சத்யா. மதிமுக முதன்மைச்செயலாளராக துரை வைகோ பதவியேற்றது முதல் மல்லை சத்யாவுக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே மோதல் தொடங்கியது.
இதையடுத்து, கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக மல்லை சத்யா மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும் மல்லை சத்யாவிடம் கடந்த 17-ம் தேதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து மல்லை சத்யாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நீங்கள் அளித்த விளக்க கடிதத்தில் குற்றச்சாட்டுக்களை மறுக்கவில்லை. அதற்கு விளக்கமும் அளிக்கவில்லை. தாங்கள் அளித்துள்ள பதில், ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட முகாந்திரமாக இல்லை. தங்கள் மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் உறுதியாகியுள்ளது.
மதிமுக கொள்கைக்கும் மாறாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டதால், கட்சி விதிகளின்படி துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன். இவ்வாறு கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.
‘மறுமலர்ச்சி திமுக இல்லை மகன் திமுக’ – மதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா கூறியதாவது: இதில் எனக்கு அதிர்ச்சியோ, ஆச்சரியமோ இல்லை, மதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை குழு இருந்ததாக எனக்கு இதுவரை தெரியாது. ஏற்கெனவே தீர்ப்பை எழுதிவிட்டு போலி விசாரணை நாடகம் நடத்தியுள்ளனர். மதிமுக, திராவிட கொள்கைகளின் பிரிவினைவாதிகளாக செயல்படத் தொடங்கி விட்டது.
இது மறுமலர்ச்சி திமுக இல்லை மகன் திமுகவாக மாறி விட்டது. செப்.15-ம் தேதி காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா நடத்தவுள்ளோம் அதில் எங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, திமுக மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக முதல்வரின் வெளிநாடு முதலீடு குறித்த செய்தியை மழுங்கடிக்கவே இதை இன்று அறிவித்துள்ளனர்.