சென்னை: மதிமுகவின் போராட்டங்களை மக்கள் மன்றத்தில் முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் முடிந்த மறுநாளே, தமிழகத்தின் வாழ்வாதாரங்களை காக்கும் வகையில் நான் பங்கேற்று உரை நிகழ்த்தும் 8 பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அறிவிப்பை வெளியிட்டேன்.
ஆக.9-ம் தேதி முதல் நாள் கூட்டம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் வெளியேற்றம் என்ற தலைப்பில் நடைபெறுகிறது. தூத்துக்குடியை பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு தடை விதித்த தீர்ப்பு, மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் அயர்வும், சலிப்பும் இன்றி மதிமுக போராடியதற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும். இதையெல்லாம் யாரும் திரைபோட்டு மறைக்க முடியாது. போராட்டக் களத்தை யாரும் உரிமை கோரவும் முடியாது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மக்கள் சக்தியை திரட்டி, இடையறாது போராடியிருக்கிறோம். இவற்றை மக்கள் மன்றத்தில் முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதேபோல், 8 இடங்களில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டங்களை வெற்றிகரமாக திட்டமிட்டு உரிய ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் செய்ய வேண்டும்.