மதுரை: கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதை மறைத்து, இந்து பட்டியலின இடஒதுக்கீட்டில் போட்டியிட்ட அதிமுக பெண் பேரூராட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி கவுன்சிலர் அய்யப்பன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 2022 உள்ளாட்சித் தேர்தலில் தேரூர் பேரூராட்சி வார்டு 8-ல் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 2-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற அமுதாராணி, பேரூராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தப் பதவி பட்டியலினத்துக்கு (எஸ்.சி.) ஒதுக்கப்பட்டிருந்தது. அமுதாராணி 2005-ல் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்தார். தேர்தலில் இதை மறைத்துவிட்டார். பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் வேறு மாதத்துக்கு மாறினால், பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டுப் பலனைப் பெற முடியாது.
எனவே, அமுதாராணியின் எஸ்.சி. சாதிச் சான்றிதழை ரத்து செய்து, அவரை தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்து நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, கிறிஸ்தவரை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், அவர் தேர்தலில் போட்டியிட மனுச் செய்தபோதே, அவரை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செயல்படாமல், ஒருதலைப்பட்சமாக தேர்தல் அதிகாரி செயல்பட்டுள்ளார். தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகள் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தைக் கேலிக் கூத்தாக்குகின்றன.
பேரூராட்சித் தலைவர் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அமுதா ராணிக்கு ஆதரவாக நெல்லை மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை உறுப்பினர் செயலர் அறிக்கை அளித்துள்ளார். இது சட்டத்துக்குப் புறம்பானது. அவரது அறிக்கை ரத்து செய்யப்படுகிறது.
பேரூராட்சித் தலைவரின் செயல், அரசியலமைப்புச் சட்டத்தை ஏமாற்றும் செயலாகும். எனவே, தேரூர் பேரூராட்சித் தலைவராக அமுதாராணி தேர்வு செய்யப்பட்டதை தகுதி நீக்கம் செய்து அறிவிக்க வேண்டும். அவர் கிறிஸ்தவரை திருமணம் செய்து கொண்டதால், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அரசின் பலன்களை பெறுவதற்கான தகுதியை இழந்து விட்டார். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.