சென்னை: “சேலத்தில் நடந்த செம்மண் கடத்தலை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளரை கடுமையாக தாக்கி, கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய மணல் கொள்ளை ரவுடிகளை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கு வேண்டும்.” என்று தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகம் முழுக்க நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையை முதல்வர் ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும். மணல் கொள்ளையர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்து, அவர்களின் சொத்துக்களை சட்டரீதியாக கையகப்படுத்தி மணல் கொள்ளைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சேலம்,வெள்ளியம் பட்டி பகுதியில் நடந்த செம்மண் கடத்தலை படம் பிடிக்க சென்ற செய்தியாளரை கடுமையாக தாக்கி, கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி கேமராவை பிடுங்கி வயரை அறுத்து அட்டூழியம் செய்துள்ள மணல் கொள்ளை ரவுடிகளை உடனடியாக தமிழக அரசு கைது செய்து அவர்கள் பயன்படுத்திய வாகனங்களைப் பறித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
மேலும் தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்துவரும் மணல் கொள்ளையை தடுக்கும் வகையில் தன்னுடைய நேரடி மேற்பார்வையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தில் தொடரும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க தவறிய, மாநிலம் முழுக்க மணல் கொள்ளையர்களுக்கு உடந்தையாக நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகளும் , தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அரசு நிர்வாகத்தினரும் சட்டத்தையும் மதிக்காமல் தைரியமாக செயல்படுவதன் காரணமாக தமிழகத்தின் மண் வளம் பயங்கரமாக சுரண்டப்படுகிறது. இதுகுறித்து முழுமையான உளவுத்துறை விசாரணையை செயல்படுத்தி தமிழக அரசில் உள்ள கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டுபிடித்து பணியிடை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.
தமிழக அரசு நிர்வாகம்,மாவட்ட நிர்வாகம் இந்த நிர்வாக சீர்கேட்டை கேட்காமல் அலட்சியமாக செயல்பட்டதை, மண்வளம் கொள்ளை போவதை, சேலம் மாவட்டம் வில்லியம்பட்டி பகுதியில் அனுமதி இன்றி திருட்டுத்தனமாக, மண் அள்ளப்படுவதை துணிவுடன் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் 30-க்கும் மேற்பட்ட மண் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சிலம்பரசனை தாக்கிய ரவுடிகளுக்கு இந்தப் பகுதியில் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரே வேலியே பயிரை மேய்ந்தது போல் உடந்தையாக இருப்பது தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கு சான்று.
மணல் கொள்ளையை தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டின் அவலத்தை செய்தி சேகரிக்க சென்றவரை தாக்கக்கூடிய தைரியம் மண் திருடர்களுக்கு எங்கிருந்து வந்தது? திமுக ஆட்சியில் மணல் கொள்ளையை தட்டி கேட்கும் நேர்மையான வட்டாட்சியர், விஏஓ தொடர்ந்து தாக்கப்படுவதும் கார், லாரி மூலமாக மோதி கொலை செய்ய நடக்கும் முயற்சிகளும், கொலை செய்யப்பட்டதும் விடியாத திமுக திராவிட ஆட்சியின் சாட்சிகள்.
நேர்மையான பத்திரிகையாளராக தன்னுடைய கடமையை துணிந்து செய்த செய்த செய்தியாளர் சிலம்பரசனை தாக்கிய மண் கொள்ளையர்களுக்கும், அவர்களுக்கு பின்னணியில் செயல்பட்ட அரசுத் துறையினர் ஆளுங்கட்சியினர் மீதி முதல்வர் ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மூலம் கொள்ளை அடிக்கப்பட்ட ஊழல் ஊழல் பணம் ரூ.4,730 கோடி அளவுக்கு பல்வேறு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என ஏற்கனவே அமலாக்கத் துறை விசாரணை அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த எம்.அழகர்சாமி என்பவர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 2024 டிசம்பர் 22ஆம் தேதி தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்கள் விரிவான, முழு தகவல்களுடன் கூடிய அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து 2025 ஜனவரி 27 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு என்ன பதில் அளித்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைக்கு உரிய மதிப்பளித்து, தமிழக அரசு தானாக முன்வந்து மணல் கொள்ளை குறித்து விசாரணை செய்ய, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரித்து, தனது ஆட்சியில் தன் கண்ணெதிரே நடக்கும் மணல் கொள்ளையை உடனடியாக தடுக்க முற்பட வேண்டும். 2026-ல் தமிழ்நாட்டின் வளங்களைச் சுரண்டும் திமுக-விடம் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி மீட்கும். மண் வளத்தை பாதுகாக்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.