மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், உயர் நீதிமன்ற பதிவாளரிடம் இருந்து மாவட்ட நீதிபதியின் விசாரணை அறிக்கை, வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டனர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவரை நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரிப்பதற்காக தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். அவரை விசாரணைக்காக பல இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அஜித்குமார் உயிரிழந்தார். இதையடுத்து கோயில் பசு மடத்தில் வைத்து அஜித்குமாரை தனிப்படை போலீஸார் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தனிப்படை காவலர்கள் 5 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அஜித்குமார் சட்டவிரோத காவல் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமித்து அஜித்குமார் சட்டவிரோத காவல் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனம், மடப்புரத்தில் அஜித்குமார் குடும்பத்தினர், கோயில் ஊழியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதனிடையே, உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது அஜித்குமார் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. பின்னர் உயர் நீதிமன்றம், அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்குடன், அஜித்குமார் மீது பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கையும் சிபிஐ விசாரிக்க வேண்டும். ஒரு வாரத்தில் விசாரணை அதிகாரியை சிபிஐ இயக்குநர் நியமிக்க வேண்டும். சிபிஐ விசாரணை அதிகாரி, உயர் நீதிமன்ற பதிவாளரிடமிருந்து அஜித்குமார் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெற்று உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும். ஆக.20-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து அஜித்குமார் வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக சிபிஐ டிஎஸ்பி மோஹித்குமார் நியமிக்கப்பட்டார். பின்னர் அஜித்குமார் மரணம் தொடர்பாக சிபிஐ தனி வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு மதுரை வந்தனர். இன்று காலை மதுரை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
பின்னர் சிபிஐ அதிகாரிகள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு சென்றனர். அங்கு உயர் நீதிமன்ற பதிவாளரை சந்தித்து அஜித்குமார் வழக்கு தொடர்பான வழக்கு ஆவணங்கள், சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கிய டிரைவ் மற்றும் சம்பவ இடங்களில் சேகரிக்கப்பட்ட தடயங்களை டிஎஸ்பி மோஹித்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரை சந்தித்த சிபிஐ அதிகாரிகள் உயர் நீதிமன்ற உத்தரவுபடி விசாரணைக்கு தேவையான வாகனம், பணியாளர்கள் நியமனம் போன்ற வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர். நாளை முதல் அஜித்குமார் காவல் மரணம் வழக்கு சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.