சென்னை: மனை பட்டா உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என விசிக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முகநூல் நேரலையில் அவர் பேசியது: “புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், 3 மாவட்டச் செயலாளர்களை தவிர்த்து விட்டு ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டத்தை நடத்துவதாக அறிகிறேன். இது கட்சி விதிகளுக்கு முரணானது. மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. இதை முன்னனி நிர்வாகிகள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் புகார் பரிசீலனையில் இருக்கிறது.
இப்படிப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் 144 மாவட்டச் செயலாளர்களையும் நான் உடனடியாக நீக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அணுக முடியாது. போராட்டக் களத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடும் கட்சிதான் உயிர்ப்போடு இருக்கும். நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் செல்வதையே கட்சிப் பணிகள் என நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
நாள்தோறும் மக்களை சந்தித்து, பிரச்சினைகளை வரிசைப்படுத்தி செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டும். எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் மனை பட்டா கோருவது பிரச்சினையாக இருக்கிறது. விளிம்பு நிலை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இதுபோன்ற பிரச்சினைகளில் தான் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.
சின்ன பிரச்சினைகளை பெரிதுபடுத்த கூடாது. அவ்வாறு நான் செய்தால் கட்சியையே நடத்த முடியாது. மதச்சார்பின்மை காப்போம் பேரணியின் தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தை ஜூலை 31-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் நடத்தி தலைமைக்கு அறிக்கை அளிக்க வேண்டும்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.