தமிழக மக்களின் நலன் காக்க ஒன்றுப்ட அதிமுக தான் ஒரே தீர்வு என்று சசிகலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கம், இன்றைக்கு ஏளனமாக பேசும் அளவுக்கு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் இன்று கட்சி பெரும் சோதனைக்கு ஆளாகி உள்ளது. கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம் கோர்த்து ஒன்றிணைந்து எதிரியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நம் மனமாச்சர்யங்களை மறந்து, கருத்து வேறுபாடுகளை கடந்து கட்சி, கட்சியின் நலன், கட்சியின் எதிர்காலம், கட்சியின் வெற்றி முக்கியம், அந்த வெற்றி திமுக என்ற தீய சக்தியை வரும் தேர்தலில் வீழ்த்துவதாக அமைவது மிக முக்கியம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டிய முக்கிய தருணம் இது.
எந்த திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்தும், அரசியல் களத்திலிருந்தும் அப்புறப்படுத்த வேண்டும் என்று எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பாடுபட்டார்களோ, அந்த திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய சூழலை நாம் உருவாக்கி விடக்கூடாது.
எனக்கு நம் கட்சியினர் யார் மீதும் எந்தவித கோபமோ, வருத்தமோ இல்லை. உங்களில் ஒருத்தியாக, உங்களின் சகோதரியாக இருந்து அனைவருடன் ஒன்றிணைந்து கழகப் பணியாற்றவே நான் விரும்புகிறேன். கட்சி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது. இதை இப்படியே இனியும் வேடிக்கை பார்ப்பது நம் இருபெரும் தலைவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகிவிடும்.
மேலும், தமிழக மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய அநீதியாகிவிடும். எனவே, தமிழக மக்கள் நலன் காக்க ஒன்றுபட்ட, வலிமை மிக்க அதிமுக தான் ஒரே தீர்வு. அதைத்தான் அனைவரும் விரும்புகின்றனர்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.