ஊட்டி: மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பாஜக சார்பில் மூவர்ணக்கொடி ஊர்வலம் நடந்தது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜக மாவட்ட தலைவர் தர்மன், அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத், கூடலூர் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன், முன்னாள் எம்பி கே.ஆர்.அர்ஜூணன் உட்பட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
ஊட்டி சேரங்கிராஸ் பகுதியிலிருந்து கைகளில் மூவர்ணக்கொடி ஊர்வலம் கமர்சியல் சாலை வழியாக ஏடிசி சுதந்திர திடலில் நிறைவடைந்தது. பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் மூர்வணக்கொடி ஊர்வலம் நடந்து வருகிறது.
நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் இந்தியா வல்லரசு நாடாகவும், ஒரே நாடு ஒரே மக்கள் என்ற நோக்கில் இப்பேரணி நடத்தப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது நாட்டுக்கு பெரிய வெற்றி கிடைத்தது. பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளோம்.
கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடின் வளர்ச்சி பின்நோக்கி சென்றுள்ளது. ஸ்டாலின் வளர்ச்சியை பின் நோக்கி கொண்டு சென்று விட்டார். நான்கு ஆண்டுகளாக யாரோ அவரை இயக்கி வருகின்றனர். தற்போது உங்களுடன் ஸ்டாலின் என முகாம் நடத்துகின்றனர். இத்தனை காலம் அவர் யார் கூட இருந்தார். மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த அரசால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.
எங்கும் லஞ்சம், போதைப் பொருட்கள் புழக்கம், கொலை கொள்ளை என நடந்து வருகிறது. எனவே, இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப நேரம் வழந்து விட்டது. இந்த ஆட்சியில் மகளிருக்கு பாதுகாப்பில்லை. புகார்தாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையுள்ளது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது’ என்றார்.