மறைமலை நகர்: மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது என அதிமுக வர்த்தக பிரிவு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சீ.த.செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதி அதிமுக சார்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 29-ம் தேதி) நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வர்த்தக பிரிவு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சீ.த.செல்லப்பாண்டியன் பங்கேற்று கட்சியின் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது, முன்னாள் அமைச்சர் சீ.த.செல்லப் பாண்டியன் பேசியதாவது: கழக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் செயல்பட்ட அரசு வரிகள் உயர்த்தாமல் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை கையாளுவதில் கவனம் செலுத்தியது. இன்றைய ஸ்டாலின் மாடல் அரசு சொத்து வரி வீட்டு வரி குழாய் வரி உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தியது மட்டுமல்லாமல் மின் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி உள்ளது.
மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் உள்ளார். 2026-ல் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் அதற்கு தற்போது அமைக்கப்பட்டிருக்கும் பூத் கமிட்டியை நிர்வாகிகள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதிமுக அரசின் சாதனைகளையும் திமுக அரசின் அவலங்களையும் மக்கள் மத்தியில் நாம் எடுத்து தெளிவாக புரிய வைக்க வேண்டும். மக்கள் ஸ்டாலினுக்கு எதிராக வாக்களிக்க தயாராக உள்ளனர். கட்சி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதே நமது இலக்கு. அப்போது தான் அதிமுக நல்லரசு அமையும்.
அதிமுக அரசு செயல்படுத்திய பல திட்டங்கள் முடங்கிப் போய் உள்ளது. அவை மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செயல்படுத்தப்படும். மக்களுக்கான திட்டங்களை தீட்டுவதிலும் அவற்றை செயல்படுத்துவதிலும் பழனிசாமி திறம்பட செயல்பட்டார். இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஆங்காங்கே போட்டோ சூட் நடத்திக் கொண்டிருக்கிறார். இவற்றிற்கு கட்சியினர் முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று பேசினார்.