ராமநாதபுரம்: மக்கள் செல்வாக்கை இழந்த கட்சியாக திமுக மாறி வருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
ராமேசுவரத்தில் நடைபெறும் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ராமநாதபுரம் வந்தார். ராமநாதபுரம் அச்சுந்தன்வயலில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆளும் திமுக அரசு பல்வேறு இடையூறுகள் செய்து வருகிறது. வரும் 22-ம் தேதி திட்டமிட்டபடி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றி மாநாடாக நடைபெறும். இதை திமுக அரசு தடுக்க நினைத்தால் நீதிமன்றத்துக்குச் செல்வோம்.
அதிமுக, பாஜக கூட்டணி அமைந்ததும், திமுகவுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. மக்கள் செல்வாக்கை இழந்த கட்சியாக திமுக மாறி வருகிறது. தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்றிரவு மதுரை வருகிறார். நாளை காலை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின், மாலையில் பொதுக் கூட்டத்திலும், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். பாமகவில் உள்கட்சி பிரச்சினை நடக்கிறது. தந்தை, மகனுக்கு இடையே நடைபெறும் பிரச்சினையில் கருத்துச் சொல்ல முடியாது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் ஐபிஎல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற ஊர்வலத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இதைவிடக் கூடுதலான கூட்டம் கூடியது. ஆனால், எந்த அசம்பாவித சம்பவமும் அங்கு நடைபெறவில்லை. பெங்களூருவில் ஆளுங்கட்சி திட்டமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்த சம்பவத்தையடுத்து பற்றிப் பேசாமல் அமைச்சர் மனோ தங்கராஜ் கோயிலுக்குக் கூட்டமாகச் செல்லக் கூடாது எனக் கூறியுள்ளார். பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை என்ன எனச் சொல்கிறார் அமைச்சர்” எனத் தெரிவித்தார்.