Last Updated : 29 Sep, 2025 03:26 PM
Published : 29 Sep 2025 03:26 PM
Last Updated : 29 Sep 2025 03:26 PM

விருதுநகர்: மக்கள் கேள்வி கேட்டால் தான் நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாள் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று (செப்.29) விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள குண்டாறு பகுதியை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்த நடை பயணத்தில் மக்களை சந்தித்து அவர்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பதை அறிந்து அவர்களோடு இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தான் இதன் முக்கிய நோக்கம். திமுக ஆட்சி வருவதற்கு முன்பு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி நாட்களை 150 நாட்களாக உயர்த்தி வழங்குவோம் என்று கூறினார்கள். ஆனால் தற்போது 10 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார்கள். ஆனால் யாருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இப்பகுதியில் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் 50 முதல் 500 டிஎம்சி வரை தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. அதில் 7 டிஎம்சி தண்ணீரை தான் நாம் கேட்கிறோம். கரூரிலிருந்து 264 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வந்தால் இப்பகுதியில் விவசாயம் செழிக்கும். கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டத்திற்கு ரூ.360 கோடி ஒதுக்கப்பட்டது ஆனால் மொத்தம் உள்ள 264 கிலோ மீட்டர் தூரத்திற்கு இதுவரை 8 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பணிகள் நடந்துள்ளன. குண்டாறு இணைப்பு திட்டம் என்ன ஆனது என்று உங்கள் பகுதி நிதி அமைச்சரிடம் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். நீர்ப்பாசன திட்டங்கள் மூலம் தான் பல தலைமுறை செழிக்கும்.
நீங்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் அன்று மாலையிலேயே டாஸ்மாக் கடைக்கு போய் விடுகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவுக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சருக்கு ரூ.364 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணி முடிப்பது சிரமமாக உள்ளதா என மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
ஆறுகளில் ஒவ்வொரு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். அப்போதுதான் நீர் ஆதாரம் உயரும். ஆனால் மணல் கொள்ளைக்காக தடுப்பணைகள் கட்டப்படுவதில்லை.” என்று பேசினார். இந்நிகழ்ச்சியின் போது மாநில பொருளாளர் திலகபாமா, மாவட்டச் செயலாளர் செந்தில் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
FOLLOW US
தவறவிடாதீர்!