சென்னை: “அதிமுகவில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் திமுகவை குச்சியால் தொட்டால் கூட அதை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என ஓபிஎஸ் குறித்து ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் தமிழக சட்டம் – ஒழுங்கு இல்லை. ஏற்கெனவே, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் போலீஸாரால் அடித்து கொல்லப்பட்டார். நியாயம், தர்மத்தை பற்றி கவலைப்படாமல் உண்மையை மறைப்பதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது.
தற்போது, திருநெல்வேலியில் கவின் என்ற இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். சாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். அப்படி என்றால் ஆணவக் கொலை ஏன் நடந்தது என திமுக பதிலளிக்க வேண்டும். சாதியை ஒழித்ததாக திமுகவும், திராவிட சித்தாந்தம் உடையவர்கள் பேசியது அனைத்தும் பொய். திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் சாதி வன்மத்தை, சாதி உணர்வுகளை அழிக்கமுடியவில்லை.
தமிழகத்தில் கலப்பு திருமணத்தை வைத்து அரசியல் செய்யும் தீய சக்திகள் இருக்கின்றன. திராவிட சித்தாந்தம் தமிழகத்துக்கு வந்த பிறகுதான் ஆணவக் கொலைகள் நடக்கின்றன. இது தமிழகத்துக்கு அவமானம். திராவிட இயக்கங்கள் தமிழகத்தின் அழிவு சக்தி என்பதற்கு ஆணவ கொலைகள் பெரிய எடுத்துக்காட்டு. உங்கள் கொள்கையில் உணர்வுபூர்வமாக இருந்தால், ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
ஆணவப் படுகொலை தொடர்பாக தேசிய அளவில் மத்திய அரசு சிறப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். ஒருவித மனநல பாதிப்பால் அவர் இப்படி பேசுகிறார். திருமாவளவன் முதலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் விருப்பம் இருப்பவர்கள் இருக்கலாம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழகம் முழுக்க திமுக என்பது தீய சக்தி என வாக்காளர்களுக்கு சொல்லி கொடுத்து தான் அதிமுகவை நடத்தினார்கள். எனவே, அதிமுகவில் இருந்த யாராக இருந்தாலும், குச்சியால் திமுகவை தொட்டால் கூட அதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம் வாங்கியிருக்கும் கடன் ரூ.5 லட்சம் கோடி. தமிழக அரசுக்கு வருவாயும் அதிகரித்துள்ளது. அதேசமயம் கடனும் அதிகமாக வாங்கியுள்ளது. இதை என்ன செய்தார்கள்? கடந்த ஆண்டு கால திமுக ஆட்சியில் நிதி எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பது குறித்து நிதி நிபுணர்கள் குழு மூலம் சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.