சென்னை: சென்னையில் உள்ள முதல்வரின் உதவி மையத்தை ஆய்வு செய்த ஸ்டாலின், மக்களிடம் கனிவாக பேசி கோரிக்கைகளை பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கோட்டூர்புரத்தில் முதல்வரின் உதவி மையம் ‘1100’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு தினமும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில், தீர்வு காணப்பட்ட மனுக்களின் தரத்தை ஆய்வு செய்ய, தினமும் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த மையத்துக்கு நேற்று வந்த முதல்வர் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, உரிய அறிவுரைகளை வழங்கினார். ‘‘பொதுமக்களிடம் கனிவாக பேசி, அவர்களது கோரிக்கைகளை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, விவரங்களை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மு.பெ.சாமிநாதன், முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அலுவலர் த.ஜெயஷீலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.