சென்னை: சென்னை மாணவி தாரிகா மகிழ்ச்சி என்ற கருப்பொருளில் தனது 30 கலைப் படைப்புகளை பொதுமக்களின் பார்வைக்கு ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு காட்சிப்படுத்த உள்ளார்.
வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராமின் மகள் தாரிகா(18). இவர் மகிழ்ச்சி என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட தனது 30 கலைப் படைப்புகளை, சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கல்பா ட்ரூமா அங்காடியில் ஆக. 30-ம் தேதி முதல் ஒருவாரத்துக்கு காட்சிப்படுத்த உள்ளார்.
இதன் தொடக்கவிழா, அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்காக, அவர் லென்ஸ் மூலம் ஆய்வு செய்து தனது படைப்பாற்றல் திறனை திரைச் சீலைகள், சிற்பங்கள் மூலம் வெளிப்படுத்தவுள்ளார்.
இதுகுறித்து, தாரிகா கூறுகையில், “இந்த உலகில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புவோம். மகிழ்ச்சி என்பது உலகளா விய உணர்வாக இருப்பதால், இந்த கண்காட்சியின் கருப்பொருளாக மகிழ்ச்சியைத் தேர்வு செய்தேன். இந்த சுருக்கக் கலை மூலம் அதாவது ஒரு காட்சியை யதார்த்தமாக சித்தரிப்பதற்கு பதிலாக அதன் சாராம்சத்தை வெளிப்படுத்தச் செய்யும் வகையில் இருக்கும்”என்றார்.
தாரிகாவின் கலை வழிகாட்டி ஆசிரியர் டயானா சதீஷ் கூறுகையில், “இந்தப் படைப்புகளை தாரிகா இயற்கை சாயங்களைப் பயன்படுத்தி செய்துள்ளார். சிறப்பாக வண்ணம் தீட்டி, நேர்த்தியான வடிவமைப்பில் தைத்துள்ளார்.
திருக்குறளை மையமாக கொண்டு சென்னையில் 3 கண்காட்சிகள் மூலம் தாரிகா தனது கலைத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். நவராத்திரி விழாவின் போது, கடல், அமேசான் காடுகள், ஜப்பான், மனித மூளை, பணம் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களைச் சுற்றி கலை படைப்புகளை உருவாக்கியுள்ளார்”என்றார்.