சென்னை: அந்தமானில் வசிக்கும் தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்கக்கோரி தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது, உயர் நீதிமன்ற முதல் மாடியிலிருந்து குதித்து 15 வயது சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த நபரும், அவரதுமனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார்.
அந்த சிறுமி தனது அம்மாவுடன் அந்தமானில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். சமீபத்தில் சிறுமியின் தாயார் வேறு ஒரு நபரைஇரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்தமானில் உள்ளதனது மகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக்கோரி சென்னையில் உள்ளசிறுமியின் தந்தை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்தமானில் உள்ள சிறுமியை மீட்டு ஆஜர்படுத்த நீலாங்கரை போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது போலீஸார் அந்த சிறுமியை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்த சிறுமி சென்னையில் வசிக்கும் தனது தந்தையுடனோ இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தாயாருடனோ செல்ல விரும்பவில்லை. அந்தமானில் தனியாக வசிக்கும் பாட்டியுடன் இருக்க விரும்புவதாக தெரிவித்தார். அதையடுத்து நீதிபதிகள் சிறுமிக்கும், தந்தைக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் கொடுத்து, அதன்பிறகு ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த சிறுமி தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பாட்டியுடன் செல்லவே விரும்புவதாக மீண்டும் தெரிவித்தார். அதற்கு அவரது தந்தை ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் ஒரு முடிவு எட்டப்படும் வரை அந்த சிறுமியை கெல்லீஸில் உள்ள அரசினர் காப்பகத்தில் தங்க வைக்கும்படி போலீஸா ருக்கு அறிவுறுத்தினர்.
இதனால் மனமுடைந்த அந்த சிறுமி உயர் நீதிமன்றத்தின் முதல் தளத்தில் இருந்த நீதிமன்ற அறையிலிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் உடலில், முகத்தில் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அந்த
சிறுமியை மீட்ட பாதுகாப்பு போலீஸார், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.