சிவகங்கை: போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் பிஎன்எஸ்எஸ் 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்து திருப்புவனம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வெங்கடேஷ் பிரசாத் விசாரணை நடத்தினார். இதனிடையே அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருப்பதும், ரத்தக் கசிவு இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு பிஎன்எஸ் 103 (1) பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டது.
தொடர்ந்து தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவர்கள் 5 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நடுவர் வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மேலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டார். மேலும் சிவகங்கை மாவட்டத்தை, ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை பணியிடைநீக்கம் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.