சென்னை: போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேற்று சந்தித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தவெக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை சிவானந்தா சாலையில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக, கடந்த 4 ஆண்டுகளில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேற்று சந்தித்துப் பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல், அயனாவரத்தைச் சேர்ந்த விக்னேஷ், கொடுங்கையூரைச் சேர்ந்த அப்பு என்ற ராஜசேகர், திருவண்ணாமலையைச் சேர்ந்த தங்கமணி, புதுக்கோட்டையைச் சேர்ந்த சின்னதுரை, தருமபுரியைச் சேர்ந்த செந்தில் ஆகியோரது குடும்பத்தினரை சென்னை பனையூரில் உள்ளகட்சித் தலைமைய அலுவலகத்தில் விஜய் சந்தித்துப் பேசினார்.
அவர்களிடம், உயிரிழந்தவர்களை எவ்வாறு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர், உயிரிழப்புக்கு பின் அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டதா,
சம்பந்தப்பட்டவரின் இறப்புக்குப் பின்னர் குடும்பத்தினர் எதிர்கொண்ட பாதிப்புகள், குடும்பத்தின் தற்போதைய நிலை, வழக்கின் நிலை, காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் கேட்டறிந்தார். இன்று சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மேடையேற்றவும் தவெக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதில் விஜய் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.