சென்னை: போலி வணிகர்களைத் தடுக்க கள ஆய்வு செய்வது அவசியம் என்று வணிகவரித் துறை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி அறிவுறுத்தினார். சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்ட அரங்கில், நடப்பாண்டு ஜூன் மாதம் வரையிலான அனைத்து வணிகவரி இணை ஆணையர்களின் பணித்திறன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: புதிதாக ஜிஎஸ்டி வரியில் இணைய விண்ணப்பிக்கும் வணிகர்களின் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்ப்பதுடன், அவர்கள் உண்மையாக தொழில் புரிகிறார்களா என்பதையும் கள ஆய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் போலி வணிகர்களைத் தடுக்க முடியும்.
கள ஆய்வுக்குச் செல்லும்போது ரூ.40 லட்சத்துக்கும் மேல் தொழில் செய்யும், ஜிஎஸ்டி தொடர்பான விழிப்புணர்வு இல்லாத வணிகர்களுக்கு, அவர்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் இணையுமாறு அறிவுறுத்த வேண்டும். அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தரும் வகையில், அனைவரும் கவனமாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில், சேலம் கோட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த மறைந்த வணிகர் ராமசாமி குடும்பத்தைச் சேர்ந்த பழனியம்மாள், ஈரோடு பெரிய அக்ரஹாரத்தைச் சேர்ந்த வணிகர் தி.சி.சுயம்புலிங்க முத்து குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா, முகமது நாசர் அலி ஷேக்மைதீன் குடும்பத்தைச் சேர்ந்த ஜீலைகா மஸ்னூனா ஆகியோருக்கு குடும்ப நல நிதி உதவித் தொகையாக தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்வில், வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், வணிகவரி ஆணையர் எஸ்.நாகராஜன், இணை ஆணையர் மொ.நா.பூங்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.