சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்துள்ளதால் அது தொடர்பான விசாரணை முடியும் வரை நிலத்தை விற்க தடை விதிக்க வேண்டும் என புழுதிவாக்கத்தை சேர்ந்த சிவகாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்துக்கு உரிமை கோரி மோசடியாக பெறப்பட்ட வாரிசு சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என போனிகபூர் அளித்த விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க தாம்பரம் தாசில்தாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போனி கபூருக்கு எதிராக சிவகாமி என்பவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனது தாத்தா சம்மந்த முதலியாரின் 5 வாரிசுதாரர்களின் ஒருவரான இராணியம்மாள் என்பவரின் வாரிசுகள், மற்ற வாரிசு தாரர்களுக்கு தெரியப்படுத்தாமல் சென்னை இசிஆரில் உள்ள 1.34 ஏக்கர் நிலத்தை நடிகை ஸ்ரீதேவிக்கு கடந்த 1988 ம் ஆண்டு விற்பனை செய்துள்ளனர்.
முறையான ஆவணங்கள் இல்லாமல் ஸ்ரீதேவியால் 35 வருடமாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய முடியவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின் போலி ஆவணங்கள் மூலம் அவரின் கணவர் போனி கபூர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்துள்ளதால் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது இந்த நிலத்தை போனி கபூர் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் சிவகாமி தெரிவித்துள்ளார்.