ஈரோடு: போர் விமான இயந்திரம் வடிவமைக்கும் தொழில்நுட்பம் உலகில் 4 நாடுகளில் மட்டும் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா 5-வது நாடாக அதில் இடம்பெறும் என்று ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு கூறினார்.
தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. இதில், கணித ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்புக்காக கோவை அமிர்தா பல்கலை. கணிதத் துறை உதவிப் பேராசிரியர் பொ.பிரகாஷுக்கு, ‘அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு விருது’ மற்றும் ரூ.1 லட்சம் பொற்கிழி வழங்கப்பட்டது.
விருதை வழங்கி வேலூர் விஐடி கல்வி நிறுவனங்களின் நிறுவனர்- வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது: வளர்ந்த நாடுகளில் 60 முதல் 100 சதவீதம் பேர் வரை உயர்கல்வி பயிலும் நிலையில், இந்தியாவில் 28 சதவீதம் பேர்தான் உயர்கல்வி பயில்கின்றனர். உலகில் 22 நாடுகளில் உயர்கல்வி வரை இலவசமாக அளிக்கப்படுகிறது.
40 நாடுகளில் 3-ல் ஒரு பங்கு தொகையை அரசு ஏற்கிறது. மொத்த வருவாயில் 6 சதவீதத்தை கல்விக்கு செலவழிக்க வேண்டும். ஆனால், நம் நாட்டின் நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு 2.5 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. எனினும், தமிழகத்தில் 21 சதவீதம் கல்விக்கு செலவிடப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு பேசியதாவது: ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) 50 ஆய்வுக்கூடங்கள் மூலம் விமானங்கள், ஏவுகணை, போர்க்கப்பல், நீர்மூழ்கி கப்பல் மற்றும் தரை போர் வாகனங்களை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் எல்லையில் நடந்த துல்லிய பதிலடி தாக்குதலில், நமது இந்திய இளைஞர்களின் தொழில்நுட்பத்தில் உருவான ஏவுகணை மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது. போர் விமான இயந்திரம் வடிவமைக்கும் தொழில்நுட்பம் உலகில் 4 நாடுகளில் மட்டும் உள்ளது.
இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா 5-வது நாடாக அதில் இடம்பெறும். அந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் குழுவில், தமிழகத்தைச் சார்ந்த நானும் இடம்பெற்றுள்ளேன். எப்போதும் வாசிப்பதை நிறுத்திவிடக் கூடாது. புத்தகங்கள்தான் என்னை வழிநடத்தின. தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், ஓசூர், கோவை ஆகிய நகரங்களை ஒருங்கிணைத்து பாதுகாப்பு தொழில்துறை தடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கென உருவாக்கப்பட்டுள்ள 69 நிறுவனங்களில் கடந்த பிப்ரவரி வரை ரூ.4,700 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், கோபி துணை ஆட்சியர் சிவானந்தம், மக்கள் சிந்தனைப்பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், நந்தா கல்வி நிறுவனத் தலைவர் வி.சண்முகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.