சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி சார்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை ரூ.276 கோடிக்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16ம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள், 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானத்துக்கு தடை விதிக்கக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் கு.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “இரு மண்டலங்களிலும் பணியாற்றும் 2,042 நிரந்தர பணியாளர்கள், வேறு மண்டலங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும், 1,953 தற்காலிக பணியாளர்கள் ஒப்பந்த நிறுவன விதிகளின்படி பணியமர்த்தப் படுவார்கள் என்றும் கூறப்பட்டாலும், அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த பிரச்னை தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தொழிலாளர் நீதிமன்ற அனுமதியின்றி, தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி சுரேந்தர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மனுதாரர் தரப்பில், “2,000 பேர் தெருக்களில் போராடி வருகிறார்கள். குப்பையை போல் அவர்கள் வீசி எறியப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என வாதிடப்பட்டது. அப்போது, தொழிலாளர்கள் முழுமையாக பாதுகாப்பாக இருப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, பதில் மனு தயார் செய்ய அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை மறுநாள் (ஆக்ஸ்ட் 13ம் தேதி) அன்று தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே, தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்கள் சிரமப்படுவதாகவும், போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்கறிஞர் வினோத் என்பவர் அவசர முறையீடு செய்தார்.
அப்போது அரசு தரப்பில், சேப்பாக்கம், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்த காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.