சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி இருவரும் சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல் குமார் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், நடிகர் கிருஷ்ணா தரப்பில் வழக்கறிஞர் இன்பண்ட் தினேஷ் ஆகியோர் ஆஜராகி, “தங்களது மனுதாரர்களிடமிருந்து எந்த போதைப் பொருளும் கைப்பற்றப்படவில்லை. மருத்துவ பரிசோதனையிலும் போதைப் பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை என்பதால், இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டனர்.
அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.வினோத்ராஜா ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார்.இந்நிலையில், இந்த வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி எம்.நிர்மல்குமார் நேற்று உத்தரவிட்டார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘இருவரும் தலா ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீன் பிணையும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இருவரும் தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என்று நிபந்தனை விதித்துள்ளார்.