வேலூர்: தமிழ்நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட டிஜிபியால் அவர் ஓய்வுபெறும்வரை ஒழிக்க முடியவில்லை. கடைசி வரை ‘ஓ’ போட்டது தான் மிச்சம் என அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.
வேலூர் மாவட்டத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசும்போது, “தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்கிறார்கள். இதை தடுக்க இந்த அரசால் முடியவில்லை. இதில், ஆளும் கட்சிக்கு தொடர்பு இருப்பதால் காவல் துறையால் தடுக்க முடியவில்லை. காவல் துறை மானிய கோரிக்கையின்போது பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்றதாக 2,348 இடங்கள் என முதல்வர் வெளியிட்ட கொள்கை விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கைது செய்யப்பட்டது 148 பேர்தான். மற்றவர்கள் யாரும் கைது செய்யவில்லை. அந்த மற்றவர்கள் எல்லாம் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட அனைத்து அதிமுகவின் திட்டங்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தொடரும். திமுக ஆட்சியில் 2,000 அம்மா கிளீனிக்கை மூடிவிட்டார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் 4 ஆயிரம் அம்மா கிளீனிக் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக கொடுத்தால்தான் கிடைக்கும். இதில், ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் மேலிடத்துக்கு செல்கிறது. அப்படி என்றால் மாதத்து்க்கு 450 கோடி, வருஷத்துக்கு 5 ஆயிரத்து 400 கோடி, 4 ஆண்டுகளில் ரூ.22 ஆயிம் கோடி மேலிடத்துக்கு போகிறது. இந்த ஆட்சி தொடர வேண்டுமா?
தமிழ்நாட்டில் போதைப் பொருளை கட்டுப்படுத்த ஒரு டிஜிபி வந்தார். அவர் 2.0, 3.0, 4.0 என கடைசிவரை ‘ஓ’ போட்டதுதான் மிச்சம். ஆனால் ஒன்றும் முடியவில்லை. அவர் ஓய்வு பெறும் வரை ஆகும்வரை போதைப்பொருளை ஒழிக்க முடியவில்லை.
திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி பணம் வாங்கிக் கொண்டு தான் கட்சி நடத்துவதாக காட்டிக் கொடுத்ததே திமுகதான். ஒரு தேர்தலில் குறிப்பிட்ட தொகை கணக்கில் கொடுத்ததாக பத்திரிகையில் செய்தி வந்தது. அது இல்லை என அவர்கள் சொல்ல வண்டும். கூட்டணிக்காக தேர்தல் நிதி திமுக கொடுத்ததா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும்.
பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைத்தது என்ன தப்பு. எங்களை விமர்சனம் செய்ய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசனுக்கு எந்த தகுதியும் இல்லை. என்னை எனது தொகுதியில் தோற்கடிப்போம் என முத்தரசன் கூறி இருக்கிறார். நான் சொல்கிறேன், உங்க அப்பாவே வந்தாலும் என்னை எனது தொகுதியில் தோற்கடிக்க முடியாது.
கடந்த 2021 தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். எடப்பாடியில் 94 ஆயிரம் வாக்கில் வெற்றிபெற்றேன். உங்களைப் போல் காலத்துக்கு ஏற்ப நிறம் மாறும் கட்சி நாங்கள் இல்லை. எங்களுக்கு கொள்கை இருக்கிறது. கொள்கையின் அடிப்படையில்தான் அதிமுக செயல்படுகிறது” என்றார்.
அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, முக்கூர் சுப்பிரமணியன், புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, அதிமுக அமைப்புச் செயலாளர் ராமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.